மார்ச் 9
“நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும்”
எஸ்தர் 4:14
நீங்கள் ஆவிக்குரிய மௌனமாய் இருக்கிறீர்களா? அல்லது சுவிசேஷத்தை அறிவிக்கும் படி நீங்கள் உபயோகப்படுத்தப்படுகிறீர்களா? இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையில் சுவிசேஷத்தை எடுத்துச் சொல்லுவதில் தவறுகிறார்கள். இன்றைக்கு இரட்சிக்கும் சுவிசேஷத்தின் அறிவிப்பு தேவை. நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு, நெருக்கமானவர்களுக்கு, நீங்கள் சந்திக்கும் நபர்களிடத்தில் இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிவியுங்கள். அது நமக்கு கொடுக்கப்பட்ட கட்டளையாக இருக்கிறது.
நீங்கள் இன்றைக்கு மௌனமாயிருந்தால், தேவன் தம் திட்டத்தை நிறைவேற்றுவதில் வேறு வழிகளை ஏற்படுத்துவார். ஆகவே நமக்கு கொடுக்கப்பட்ட இந்த பொறுப்பை நாம் செயலாற்றுவதில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். கர்த்தர் நமக்கு இரட்சிப்பைக் கொடுத்திருப்பாரானால் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கக்கடவோம். நம்மைப் போல எத்தனையோ பேர் பாவத்தின் அடிமைத்தனத்தில் இருக்கிற மக்கள் உண்டு என்பதை நினைவுகொள்ள வேண்டும். அதை நாம் மறந்து விடக்கூடாது.
“மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே” (எஸ்தர் 4:13) என்று மொர்தெகாய் எஸ்தருக்கு சொல்லுகிறான். இரட்சிப்பின் வாழ்க்கை என்பது தனித்து ஜீவிக்கிற வாழ்க்கை அல்ல. அது மற்றவர்களுக்காக தங்களை ஒப்புக் கொடுத்து வாழ்கிற வாழ்க்கை. அதன் மூலமாக தங்கள் ஆவிக்குரிய அளவுகளில் நிறுத்திக் கொள்ளும் படியான வழிமுறையை ஆண்டவர் வைத்திருக்கிறார். சுவிசேஷத்தை அறிவிக்கும் போது நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஆவிக்குரிய காரியங்களில் வளருவீர்கள். ஆகவே தேவன் கொடுத்த கட்டளையை நிறைவேற்றுங்கள். மௌனமாய் இராதேயுங்கள்.