டிசம்பர் 8
“கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்”(சங்கீதம் 38:21).
இது தாவீது தான் நெருக்கப்பட்ட வேளையில் கர்த்தரை நோக்கி ஏறெடுக்கும் ஜெபம். அருமையானவர்களே நம்முடைய வாழ்க்கையில் நெருக்கமான சூழ்நிலைகளில் தேவனை மாத்திரமே நாம் நோக்கிப் பார்க்க கற்றுக்கொள்ளுவோமானால் நிச்சயமாக நம்முடைய நெருக்கத்தில் கைவிடமாட்டார் என்பதை அறிந்துகொள்ள முடியும். அநேக சமயங்களில் தேவனோடு கூட நாம் மனிதனையும் நம்பும் படியாக நம்முடைய மனதை திருப்பும் பொழுது அங்கு வெற்றியை பார்ப்பது அரிதாகும்.
மற்றொரு இடத்தில் “ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்”(சங் 22:19) என்று ஜெபிப்பதை நாம் பார்க்கிறோம். அன்பான சகோதரனே சகோதரியே தேவன் நம்மோடு கூட இருப்பதாக வாக்களித்துள்ளார். அவரை தாழ்மையோடு நோக்கி மன்றாடும்பொழுது நமக்கு நெருக்கமாகவ்ம் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு பெலனும் கிருபையும் அளிக்க தீவிரித்துக் கொள்ளும்படியாக இருக்கிறார் என்பதை கண்டுணரலாம்.
இந்த சங்கீதக்காரன் தம்முடைய இக்கட்டான சூழ்நிலையில் தாழ்மையாய் தேவனை சார்ந்து அவரின் நன்மையை ருசி பார்த்திருப்பார் என்பதை அறிந்துகொள்ளலாம். ஏனென்று கேட்டால் சங்கீதம் 22:44 -ல் “உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்”என்று சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். ஆகவே நம்முடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக எண்ணுகிறவர் அல்ல. அதை அருவருக்கவும் மாட்டார். மனிதனுடைய சூழ்நிலைகள் வித்தியாசமானவை. அவனுடைய சோதனைகள் பலதரப்பட்டது. அவனுடைய நெருக்கங்கள் வேறுப்பட்டவைகள். ஆனாலும், தேவன் நம்முடைய உணர்வுகளையும் நம்முடைய நிலைகளையும் அறிந்து உதவி செய்வதில் ஒருபோதும் தவறியது கிடையாது. தேவனைப் போல சகாயர் ஒருவர் உண்டோ?