கிருபை சத்திய தின தியானம்
அக்டோபர் 2 பயப்படாதே ஏசாயா 41:1-14
‘பயப்படாதே: நான் உனக்கு துணை நிற்கிறேன்.’ (ஏசாயா 41:14)
பொதுவாக எல்லா மனிதரும் பயம் என்ற காரியத்தில் பாதிக்கப்படாமல் இருக்கமுடிவதில்லை. இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் பயம் என்பது என்னை ஒருக்காலும் தொடமுடியாது என்று சொல்லமுடியாது. தேவனை அறிந்தவர்களுக்கும் பலவிதமான சூழ்நிலையில் பயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நாம் அதிலிருந்து முற்றிலும் விலக்கானவர்கள் அல்ல. ஆனால் பயத்தின் வேளையில் நம்மோடு பயப்படாதே என்று சொல்லுகிற தேவன் நமக்கு உண்டு. அவர் சகலத்தையும் அறிந்திருக்கிற சர்வவல்லவர். அவர் அறியாமல் நமக்கு நேரிடுவது ஒன்றுமில்லை. அவர் பயப்படாதே என்று சொல்லுகிறவர் மாத்திரமல்ல, அந்த பயத்தை நீக்கவும், அந்த பயத்தை உண்டாக்குகிற சூழ்நிலையை மாற்றவும் வல்லவர். ‘எனக்காக யாவற்றையும் செய்து முடிக்கிற தேவன்’ என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார்.
மனிதன் சொல்லுவான் ஆனால் செய்யமாட்டான். தேவன் அப்படியல்ல, அவர் சொல்லியும் செய்யாமலிருப்பாரோ? அவர் அந்த பயத்தை நீக்கி, அந்த சூழ்நிலையை மாற்ற உன்னோடு துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறார். அவர் இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் உன்னுடனே கூட இருக்கிறேன் என்று சொன்னவர், தம்முடைய வார்த்தையை, வாக்குத்தத்தத்தை மாற்றமாட்டார். பயம் வரும்போது நீ பெலவீனனாய்ப் போய்விடுகிறாய். ஆனால் தேவன் உன் துணையாய் இருந்து உன் பெலவீனத்தில் பெலன் கொடுப்பார். உன்னைச் சுமப்பார், தாங்குவார், தப்புவிப்பார்.
‘நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்’ (சங்க் 56:3). நீ பயப்படுகிற நாளில் யாரை நம்புகிறாய்? உண்மையான விசுவாசம் பயத்தை புறம்பே தள்ளும். ‘இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே: உன்னை மீட்டுக்கொண்டேன் உன்னை பேர் சொல்லி அழைத்தேன் , நீ என்னுடையவன் (ஏசாயா 43:1)’. என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு (பிலிப் 4:13)