ஜனவரி 2 பயப்படாதேயுங்கள் உபா 7:1-26
“அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்” (உபா 7:21)
மோசே இஸ்ரவேல் மக்களைப் பார்த்து, தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருப்பதினால் பயப்படாதேயுங்கள் என்று சொல்லுகிறார். கர்த்தர் நம்முடைய தேவனாக இருக்கும்பொழுது நாம் பயப்பட வேண்டிய அவசியம் என்ன? கர்த்தரைத் தங்கள் தெய்வமாகக் கொண்டிராத ஜனங்கள் எப்பொழுதும் பயந்தே வாழுபவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆனால் தேவனுடைய ஜனங்களுக்கு அவர் அவர்களோடே கூட இருந்து அவர்களை வழிநடத்துகிறவரும் மிகுந்த வல்லமையும் அதிபயங்கரமான தேவன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவேதான் பயப்படாதீர்கள் என்று சொல்லுகிறார்.
“சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்” (சங்கீதம் 46:7) என்று வேதம் சொல்லுகிறது. தேவன் தம்முடைய ஜனங்களுக்கு மெய்யான அடைக்கலமாக இருக்கிறார். ஆகவே நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் தேவப்பிள்ளைகளுக்கு எதிரான மக்களுடைய ஆலோசனைகளும், திட்டங்களும் நிற்காது என்று சொல்லுகிறார். “ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள், ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்” (ஏசாயா 8:9-10). தேவன் நம் பட்சத்தில் இருக்கும்பொழுது நமக்கு எதிரிடையான காரியங்கள் இந்த உலகத்தில் நமக்கு எதுவுமே இருக்க முடியாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் தேவன் சர்வத்தையும் ஆள்பவராகவும், அதிகாரம் கொண்டவராகவும் இருக்கிறார்.