மே 7
“நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது” (1தெசலோ 2:13).
இந்த வசனத்தின் அடிப்படையில் நாம் இரண்டு காரியங்களை அறிந்து கொள்ள ஆண்டவர் நமக்கு உதவி செய்கிறார். ஒன்று இந்த வேத புத்தகம் கர்த்தருடைய வசனமாக இருக்கிறது. ஆனால் அது எந்த அளவுக்கு தேவன் நம்மோடு பேசுகிற அவருடைய சத்தம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டு, அதன் அடிப்படையில் வாழுகிற ஒரு வாழ்க்கையை கொண்டவர்களாக இருக்கிறோம் என்பது மிகப்பெரிய கேள்விகுறியே. இது நம்முடைய வாழ்க்கையில் ஆழமாகப் பதிந்து இல்லாததினால், நாம் அநேக வேளைகளில் ஆண்டவர் நம்மோடு பேசுகிற அவருடைய சத்தத்தை கேட்க தவறுகிறோம். ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையின் சூழ்நிலைகளில் நம்மோடு பேச நமக்கு இந்த வேத புத்தகத்தை கொடுத்திருக்கிறார். வேத புத்தகத்தை தேவனுடைய வார்த்தை என்பதின் அடிப்படையில் அதை ஏற்றுக்கொண்டு, அதனடிப்படையில் வாழ்க்கை வாழவேண்டுமென்று யார் எண்ணுகிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் நிச்சயமாக தேவனுடைய வார்த்தையின் உன்னதமான ஆசீர்வாதத்தைக் காணமுடியும்.
மற்றும் ஒரு காரியம் அது மெய்யாகவே தேவ வசனம் தான் விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பலனும் செய்கிறது என்று சொல்லப்படுகிறது. வேத வசனம் நம்முடைய வாழ்க்கையில் பலிதமாகும் படியாக நாம் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது தேவ வசனம் நம்முடைய வாழ்க்கையில் செயல்படுகிறதை நாம் பார்க்க முடியும். தேவ வசனத்தின் மூலமாக நம்முடைய சூழ்நிலைகள் மாறுவது கிடையாது. ஆனால் நிச்சயமாக சூழ்நிலைகளின் மத்தியில் நம்முடைய இருதயம் ஆண்டவருக்கு ஏற்றவிதத்தில் செயல்படுகிற மாற்றத்தை பெற்றுக்கொள்கிறது. நாம் தேவனுடைய வார்த்தையை எந்த அளவுக்கு விசுவாசிக்கிறோம்? தேவன் சொல்லுகிறார், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.