கிருபை சத்திய தின தியானம்

மார்ச் 13                   திகையாதே கலங்காதே       யோசுவா 1:1–18

     ‘நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு

திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம்

உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்’ (யோசுவா 1:9).

          அநேக சமயங்களில் நமக்கு ஏற்படுகிற எதிர்பாராத சூழ்நிலைகளின் பொழுது நம்மை இரண்டு காரியங்கள் அதிகமாக பாதிக்கிறது. ஒன்று திகைப்பு, மற்றொன்று கலக்கம். நாம் என்ன செய்வது, எப்படி செய்வது என்று திகைத்து நிற்கிறோம். அடுத்து நாம் என்ன நடக்குமோ என்று கலக்கமடைகிறோம். நம்மை இந்த திகைப்பும் கலக்கமும் ஆட்கொள்ளும்பொழுது நம்முடைய ஸ்திரத்தன்மையிலிருந்து அசைக்கப்படுகிறோம். அன்பானவர்களே! தேவன் யோசுவாவைப் பார்த்து ‘திகையாதே கலங்காதே’ என்று சொன்னதைப் போல, இன்றும் கர்த்தர் உன்னைப் பார்த்து திகையாதே கலங்காதே என்று சொல்லுகிறார். 

          உன்னுடைய சூழ்நிலைகள் எவ்வளவு எதிர்மாறாகக் காணப்பட்டாலும், அதினால் உன் உள்ளத்தில் பயமானது காணப்பட்டாலும், நீ ஒன்றை மாத்திரம் நினைவில் கொள், கர்த்தர் உன்னோடே இருக்கிறார். இந்த சூழ்நிலைகளில் உனக்கு பெலத்தைக் கொடுத்து, அதை மேற்கொள்ள உதவி செய்வார். ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, ‘நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்’(உபா 20:1). அநேக சூழ்நிலைகளில் நாம் திகைக்கும் பொழுதும், கலங்கும் பொழுதும் அடுத்ததாக நம்மை பற்றிக் கொள்ளுவது பயம். ஆனால் நமக்கு எதிராக ஒரு பாளையம் இறங்கினாலும் அல்லது ஒரு போரே வந்தாலும் கர்த்தர் அவைகளைக் கண்டு பயப்படாதே என்று சொல்லுகிறார். ஏனென்றால் உன்னை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இரட்சித்த கர்த்தர் அவர். அவர் உன்னை ஒருக்காலும் கைவிடார் என்பதை நினைவில் கொள்.