ஜூன் 15       அற்பமாக எண்ணாதே       சகரியா 4:1-14

“அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” (சகரியா 4:10)

அருமையானவர்களே! உன் வாழ்க்கையின் ஆரம்பம் அற்பமாகக் காணப்படலாம், உன் வாழ்க்கையும் அற்பமாக என்னப்படலாம், ஆனால் தேவன் அதை அசட்டைப் பண்ணக்கூடாது என்று சொல்லுகிறார். ஒருவேளை மற்றவர்கள் உன்னைப் பார்த்து அசட்டையாக எண்ணலாம் அல்லது நீ அவர்களால் அசட்டைப்பண்ணப்படலாம். தேவன் உன்னோடும், நீ தேவனோடும் இருக்கும் பொழுது   நீ சோர்ந்து போகவேண்டிய அவசியமில்லை.  தேவனுடைய கரத்தில் இருக்கும்படியான மனிதனின் ஆரம்பம் மிக சிறியதாகவே காணப்படும். ஆனால் அதனுடைய முடிவோ மகிமைகரமான ஒன்று.

      ஆகவேதான் வேதம், “உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்” (யோபு 8:7) என்று சொல்லுகிறது. கர்த்தருடைய பிள்ளையின்  முடியவானது பரிபூரணமாக இருக்குமென்று சொல்லுகிறார். ஆகவே கர்த்தர் உனக்குக் கொடுத்திருக்கிற எளிமையான காரியத்திலும் நீ உண்மையாயிரு. கர்த்தருக்காக செய்கிற காரியத்தை அல்லது கர்த்தருடைய காரியங்களை அற்பமாக எண்ணாதே. முழுமனதுடன் அதை செய், கர்த்தர் அதை சம்பூரணப்படுத்துவார். “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்” (நீதி 4:18) என்று வேதம் சொல்லுகிறது.

      ஒரு மெய்யான தேவனுடைய பிள்ளையின் வாழ்க்கை நாளுக்கு நாள் கர்த்தரால் பிரகாசிக்கப்பட்டும், சீர்படுத்தப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு தேவனுடைய பரிபூரணத்தை நோக்கி வழிநடத்தப்படும். நித்திய ஜீவனில் பிரவேசிக்கும் படியாக அவனுடைய வாழ்க்கையானது முடிவில் கர்த்தரால் மாற்றப்படும். அது பரிபூரணம் நிறைந்த ஒரு முடிவாகக் காணப்படும். அந்த நாள் வரைக்கும் அவனை உருவாக்கி, பெலப்படுத்தி, பரிசுத்தப்படுத்தி சீர்படுத்திக் கொண்டே இருப்பார். ஆகவே நாம் நம்முடைய வாழ்க்கையைக் குறித்து அற்பமாகவோ அல்லது அசட்டையாகவோ எண்ணிவிடவேண்டாம். கர்த்தர் நிச்சயமாக நம்மை ஒருபோதும் கைவிடார்.