செப்டம்பர் 7                

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.’  (யோவேல் 2:21).

யோவேலின் புத்தகம் முதலாம் அதிகாரத்தில் திராட்சைச் செடிகளின் அழிவைக் குறித்து எழுதுகிறார். ‘பச்சைப் புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதைப் முசுக்கட்டைப்பூச்சி தின்றது.’ (யோவேல் 1: 4) ஆனால் யோவேல் இரண்டாம் அதிகாரத்தில் கர்த்தருடைய நாள் மிக கொடியது என்றும், இதைப் பார்க்கும்போது திராட்சைச் செடியின் அழிவு ஒன்றுமில்லை என்பதாகவும் சொல்லுகிறார்.

இன்று அநேக மக்கள் இந்த உலகத்தின் இழப்புகள் மற்றும் உலகத்தின் குறைவுகளைப் பெரிதாய் எடுத்து, எல்லாம் முடிந்தது என்று எண்ணுகிறார்கள். ஆனால் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்தோ ஒன்றும் கவலைப்படுவதில்லை. உலகக்காரியங்களுக்கு மிகவும் கருத்தாய் இருப்பார்கள். அதிக ஞானத்தோடே எல்லாவற்றிலும் இருப்பார்கள் ஆகவே அவர்கள் எதிர்பார்த்தவண்ணம் அதில் பலன் காணமுடியாவிட்டாலோ, அதில் நஷ்டம் ஏற்பட்டாலோ அதைத் தாங்கிகொள்ள முடிவதில்லை. ஆனால் கர்த்தரை அறியாத வாழ்க்கை எவ்வளவு பயங்கரமானது! இந்த உலகத்துக்கடுத்த காரியங்கள் கொஞ்ச நாளுக்குரியவைகள் தேவனுடைய காரியங்களோ நித்தியத்துக்குரியவைகள் என்று எண்ணுவதில்லை.

              இந்த நிலையில் காணப்பட்ட மக்களிடத்தில் யோவேல் நம்பிக்கையூட்டும் வண்ணமாக ‘தேசமே பயப்படாதே’ என்று சொல்லுகிறார். தேவன் சர்வத்தையும் ஆளுகைசெய்பவர். அவர்  அறியாமல் எந்த ஒரு தீங்கும் அனுமதிக்கப்படுவதில்லை. திராட்சத்தோட்டத்தின் அழிவும் அவர் சித்தமில்லாமல் நிகழவில்லை.  அவர் எல்லவற்றையும் ஒரு நோக்கத்தோடே செயல்படுத்துகிறவர். இவ்விதமான தேவனை, நீ கர்த்தராக, தெய்வமாகக் கொண்டிருக்கிறபடியால் களிகூரு.

                இந்த சூழ்நிலையில் தேவனை நோக்கிக் கூப்பிடும்படி யோவேல் இந்த மக்களை உற்சாகப்படுத்துகிறார். இந்த அழிவு முற்றிலும் உன்னை நம்பிக்கையற்ற நிலைக்குள் நடத்தவேண்டாம். இதன் மூலம் தேவனின் நித்திய இரட்சிப்பைத் தேடும்படிச் சொல்லுகிறார்.