“கர்த்தர் மோசேயை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும், அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். எஸ்போனிலே வாசமாயிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார்” (எண்ணாகமம் 21:34 ). 

மோசே இங்கு ஒரு பயங்கரமான சூழ்நிலையைச் சந்திக்கிறதை நாம் பார்க்கிறோம். இந்தச் சூழ்நிலையை எதிர்க்கொள்ள மோசே பயப்பட்டிருக்கலாம். ஆகவேதான் தேவன் சொன்னனர், பயப்பட வேண்டாம் என்று. கடந்த நாட்களில் தேவன் எவ்விதமாக மோசேயோடு கூட இருந்து அவனைப் பெலப்படுத்தி, வெற்றிக்கொள்ளும்படியாக செய்ததுப் போல, இந்தப் பாசான் ராஜாவுக்கும் செய்வாய் என்று தேவன் மோசேவோடு சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். அருமையானவர்களே தேவன் நம்முடைய வாழ்க்கையின் எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கிறார். முக்கியமாக நாம் பிரச்சனைகளைச் சந்திக்கும்பொழுது முதலில் நமக்கு ஆறுதல் கொடுக்கக்கூடியவர் தேவனே. நம்முடைய வாழ்க்கையில் அநேக சமயங்களில் நாம் பயப்படுகிறோம். மனிதர்களாகிய நாம் அநேக எதிர்பாராத சூழ்நிலைகளைச் சந்திக்கும்பொழுது கலங்குகிறோம். ஆனால் நம்மோடு இருக்கிற தேவன் நம்மை பெலப்படுத்துகிறார். கடந்த நாட்களில் நம்மை எவ்விதமாக அவர் வழிநடத்தினார் என்பதை சிந்திக்கும்படியாக அவர் சொல்லுகிறார். இம்மட்டும் நம்மை வழிநடத்தி வந்த கர்த்தர், உண்மையுள்ளவராய் இருந்து பல வெற்றிகளை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை நாம் நினைவு கூறுவோம். இனிமேலும் நம்மை வழிநடத்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். நாம் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்து நம்மோடு கூட இருக்கிறார். நமக்காக அவர் யுத்தம் பண்ணுவார். எண்ணாகமம் 21:35 ஆம் வசனத்தில் நாம் பார்க்கும் ஒரு மிகப் பெரிய வெற்றியை தேவன் மோசேக்குக் கொடுத்தார்.