பிப்ரவரி 26      

“நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னேகன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ளதண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்துதண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்” (எண் 20:8).

      தேவன்: ‘கன்மலையைப் பார்த்துப் பேசு. தேவனுடைய வார்த்தையை எடுத்துச் சொல்லு. அது போதுமானது கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வரும்’ என்றார். ஆனால் மோசே கன்மலையை அடித்தார். நம்முடைய வாழ்க்கையில் மோசேயைப் போல கன்மலையை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜீவன் மனிதர்களுக்குள் பிரவேசிக்கும் படியாக, அவர்களிருந்து ஜீவத்தண்ணீர் புறப்பட்டு வரும்படியாக, நாம் பலவிதமான மனித தந்திரங்களையும், மனித உத்திகளையும் கையாள வேண்டிய அவசியமில்லை. தேவனுடைய வார்த்தையை பேசுவதே தேவையான ஒன்றாக இருக்கிறது. ‘அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்’ என்று வேதம் சொல்லுகிறது. அவர் சொல்லுவது போதுமானது. நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதைச் சார்ந்து வாழ்கிற வாழ்க்கை போதுமானது. அதைவிட்டு உங்களுடைய வாழ்க்கையில் உணர்ச்சிப்பூர்வமான பலவித ஆர்ப்பாட்டங்களும், ஆடல் பாடல்களும் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

      தேவனுடைய வார்த்தையின்படி செய்வதே  இன்றைக்கு மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. ஆகவே நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் பேசுங்கள். தேவனுடைய வார்த்தையை கொண்டு மட்டுமே மக்களை உயிர்ப்பிக்க முடியும். அதுவே இன்றைக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தைக்கு புறம்பான எதையுமே நாம் கையாளக்கூடாது. அது ஆவிக்குரிய காரியங்களைக் கெடுத்துவிடுகிறதாகக் காணப்படும். தேவன் மோசேயிடம் கன்மலையைப் பார்த்துப் பேசு என்றார், ஆனால் அவனோ அடித்தான். அதனுடைய விளைவைக் குறித்து நாம் அறிந்திருக்கிறோம். இன்றைக்கு அநேக மக்கள் அவ்விதமாக தேவன் கொடுத்திருக்கிற கட்டளையின்படி பிரசங்கியாமல், அதைவிட்டு பலவிதமான காரியங்களை கையாண்டு தேவனுடைய காரியங்களைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.