மார்ச் 23   

“அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்”

மத்தேயு 19:16

      நம்மில் பெரும்பாலும் மோட்சத்துக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். ஒருவரும் நரகத்திற்குச் செல்ல விரும்புவதில்லை. அது நல்ல காரியம். இந்த வாலிபன் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளும் படியாக கேள்வியைக் கேட்டான். ஆனால் அதற்காக அவன் இருதயத்தைத் தாழ்த்தி ஒப்புகொடுக்க  விரும்பவில்லை. இந்த வாலிபனை நாம் விட்டுவிட்டு, நம் நிலையை சிந்தித்துப் பார்ப்போம். நாம் நித்திய ஜீவனை அடைவோம் என்ற ஆவலுடன், நித்திய பாதையில்  நடந்து சென்றுகொண்டிருக்கிறோமா? “என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?”  (லூக்கா 6:46) என்று இயேசுகிறிஸ்து கேட்கிறார். என்னை ஆண்டவர் என்று சொல்லுகிறீர்கள் நல்லதுதான். ஆனால் நான் சொல்லுகிறபடி நீங்கள் ஏன் செய்வதில்லை? நம்முடைய வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறது. ஆனால் அதற்கேற்ற செயல்பாடு இல்லை. இது மிக தவறானது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

      அப்போஸ்தலர்கள் 16:30 -ல் சிறைச்சாலை அதிகாரி ‘ஆண்டவமாரே இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டான். சிறைச்சாலை அதிகாரி இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கிறதைப் பார்க்கிறோம். அங்கு விசுவாசத்திற்கு உரிய தேவனுடைய வார்த்தையை அவன் ஏற்றுக் கொள்கிறான். ஆகவே ஊழியர்கள் செய்யவேண்டியது தேவனுடைய வசனத்தை போதிப்பதே மிக அவசியம். தேவனுடைய வார்த்தையின் மூலமாக விசுவாசம் வரும். பணக்கார வாலிபன் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல் துக்கத்துடன் திரும்பிப் போனான். நம் வாழ்க்கையில் விருப்பங்கள் இருப்பது நல்லது, வசனத்தைக் கேட்டு அதற்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழுவதே சாலச்சிறந்தது.