பிப்ரவரி 28
“அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி:
ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி
உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்” (லூக்கா 5:4).
அநேக சமயங்களில் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை மிக மேலோட்டமானதாக இருக்கிறது. அது மிகவும் வருந்தத்தக்க ஒரு காரியம். மெய்யாலும் நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆழமாகச் செல்லுவதில்லை. அநேக மக்கள் அகலமாக செல்ல விரும்புகிறார்கள். அதாவது ஒரு மேலோட்டமான கிறிஸ்தவர்களாகவே வாழ விரும்புகிறார்கள். ஆனால் ஆழமாக போக விரும்புவதில்லை. ஆழமாகப் போவது என்றால் என்ன? ஆண்டவருடைய வார்த்தையில் நாம் ஆழமாக செல்ல வேண்டும். தேவனுடைய வார்த்தையை நாம் அதிகமாக கவனத்தோடும், கருத்தோடும் வாசித்து சிந்தித்து அதன் அடிப்படையில் நம்முடைய வாழ்க்கை கட்டப்படும்படியாகப் பிரயாசப்படவேண்டும்.
“என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன். ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம் போட்டு, வீடு கட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது” (லூக்கா 6:46-48) என்று ஆண்டவர் சொல்லுகிறார். நாம் ஆழமாகத் தோண்டாமல் ஆழமான அஸ்திபாரம் போட முடியாது. அநேகர் மேலோட்டமாக ஒரு ஆவிக்குரிய நிலையில் இருந்துகொண்டு, மேலோட்டமான அஸ்திபாரத்தைப் போட முயற்சிக்கிறோம். அது ஆவிக்குரிய தோல்வியில் முடியும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் ஆழத்தில் தள்ளிக்கொண்டு போய் மீன் பிடிக்கும்படி நம்முடைய வலையைப் போடுவது போல, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டு அதினடிப்படையில் செயல்படுவது மிக அவசியமானதாகும். தேவனுடைய வார்த்தையை மேலோட்டமாக படித்து விட்டுவிடாமல், அதைக் குறித்து சிந்தித்து மேன்மேலும் தியானம் செய்து நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் கட்டுவதற்கு ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும்.