கிருபை சத்திய தின தியானம்
நவம்பர் 17 வியாதி யோவான் 5:1-10
“முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த
ஒரு மனுஷன் அங்கே இருந்தான்” (யோவான் 5:5 )
வியாதிகள், இந்த உலகத்தில் எத்தனை வேதனையை உண்டாக்குகிறது! எத்தனைவிதமான வியாதிகள் புதிது புதிதாக ஒவ்வொறு நாளும் தோன்றுகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக இல்லாத வியாதிகள் இன்று உலகில் தோன்றியிருக்கின்றன. இந்த மனிதன் ஒரு வருடம், இரண்டு வருடமல்ல, 38 வருடங்களாக வியாதிப்பட்டிருந்தான்.
வியாதியை நாம் எப்படி அணுகுகிறோம் என்பது அவசியமானது. எந்த வியாதியாக இருந்தாலும் அதுவும் ஒரு நோக்கத்தோடு தான் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் ஒரு திட்டத்தோடு தான் நம்மில் அதை அனுமதித்திருக்கிறார். அது விஷக்கிருமியால் ஏற்படுகின்ற வியாதியாக இருந்தாலும், அது தேவனுடைய நோக்கமில்லாமல் நமக்கு நிச்சயம் வரமுடியாது. ஆகவே முதலாவது இந்த அடிப்படை வேதத் தத்துவத்தை நாம் நன்கு விளங்கியிருத்தல் மிக அவசியமானது.
சரி இந்த வியாதியை தேவன் அற்புதமாக சுகப்படுத்த வேண்டும் என்று ஜெபிக்கலாமா? ஜெபிக்கலாம், தவறில்லை. தேவனால் கூடும். சொல்லப்போனால் எந்த வியாதியையும் நீக்கி சுகப்படுத்துகிறவர் கர்த்தர் தான். வேதத்தின்படி சிகிச்சைபெறுவதை வேதம் தடுக்கிறதா? இல்லை. மருத்துவர்களும் மருந்துகளும் தேவன் இந்த உலகில் நமக்குக் கொடுத்திருக்கும் வழிமுறைகள். அவற்றை புறக்கணித்து, விசுவாசம் என்ற பெயரில் வறட்டு பிடிவாதமாக இருப்பதை வேதம் ஒருபோதும் அங்கிகரிக்கவில்லை. எத்தனையோ மதியீனமான கிறிஸ்தவர்கள் அவ்விதம் புறக்கணிக்கும் போது அது தற்கொலைக்கு சமமானது.
ஆனால், தேவன் வியாதியை ஒருவேளை சுகப்படுத்தாமல் தொடர்ந்து இருக்க அனுமதிப்பாரா? அவ்விதமாகவும் அனுமதிக்கலாம். பவுலுக்கு முள் கொடுக்கப்பட்டது போல ஜெபித்தாலும் அதை நீக்காமலும் இருக்கலாம். ஆனால் ஏன் தேவன் அப்படி செய்கிறார்? நம்முடைய ஆத்தும நன்மைக்காகவே அனுமதித்திருக்கிறார். நீ எந்த வியாதியானாலும் கலங்காமல் பவுலைப் போல ஒப்புக்கொடுத்து ஜெபி. அப்பொழுது தேவன் நன்மையானதைச் செய்வார்.