கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 29                         மனம் நொறுங்குண்டதுமில்லை            எரேமியா 44:1-10

“அவர்கள் இந்நாள்மட்டும் மனம் நொறுங்குண்டதுமில்லை,

அவர்கள் பயப்படுகிறதுமில்லை; நான் உங்கள் முன்பாகவும்

உங்கள் பிதாக்கள் முன்பாகவும் வைத்த என் வேதத்தின்படியும்

என் கட்டளைகளின்படியும் நடக்கிறதுமில்லை” (எரே 44:10).

       தேவன் இந்த எரேமியா தீர்க்கதரிசி மூலமாக இஸ்ரவேல் மக்களிடத்தில் பேசினது, எவ்வளவு வருத்தமான காரியம் என்பதை சிந்தித்துப்பாருங்கள். ஒருவேளை தேவன் இன்றைக்கு என்னைக் குறித்து இவ்விதமாக சொல்லுவாரேன்றால், அது எவ்வளவு வேதனையான காரியம். நம்முடைய இருதயம் நொறுங்குண்டதுமில்லை, பயப்படுவதுமில்லை, வேதத்தின் படி நடப்பதுமில்லை. நண்பர்களே, என்னைக்குறித்து நான் எண்ணுவதைவிட, கர்த்தர் என்னைக்குறித்து எனன சொல்லுகிறார் என்பதை நாம் சிந்திப்பது மிக அவசியமான காரியம்.

      நம்முடைய வாழ்க்கையில் நம்மை தேவனுக்கு முன்பாக தாழ்த்துவோம். நம்முடைய பாவங்கள் குறைகளைக் குறித்து உணர்ந்தவர்களாக, அவருடைய சமுகத்தில் நாம் கெஞ்சிக் கேட்போம். அப்பொழுது கர்த்தர் நமக்கு இரங்குகிறவராக இருக்கிறார். சங்கீதம் 34:18 –ல்  “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” என்று தாவீது சொல்லுகிறதைப் பார்க்கிறோம். நாம் எப்பொழுதும் நம்முடைய இருதயத்தில் தாழ்மையான சிந்தனையோடு நடப்பது மிக அவசியமான காரியம்.

     கர்த்தர் அவ்விதமான வேளையில் நம்மை இரட்சிக்கிறார், வழிநடத்துகிறார். இன்னுமாக தேவனுக்கு இது பிரியமானது என்று வேதம் சொல்லுகிரறது. அவ்விதமான காரியங்களை நாம் சிந்திப்போமாக. தாவீது இன்னுமாக, “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங் 51:17) என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம். நம்முடைய பாவங்களைக் குறித்தும், நம்முடைய பெலவீனங்களைக் குறித்தும் உணர்ந்து கர்த்தர் பக்கமாக திரும்புவோமாக. ஏனென்றால் கர்த்தர் அவ்விதமான இருதயங்களில் வாசம் பண்ணுகிறவராகவே இருக்கிறார். ஏசாயா 57:15 –ல் “நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்” என்று சொல்லுகிறார். தேவனுக்கு பிரியமான அல்லது ஏற்ற இடம் நொறுங்குண்ட இருதயம்தான். அவ்விதமாக உன் இருதயம் காணப்படுகிறதா? இல்லையென்றால் அவரிடத்தில் உன்னை தாழ்த்து.