கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 3                     எங்கள் நீதியையல்ல                தானி 9 :10 – 19

“நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி,

எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்” (தானி 9 : 18)

            தானியேல் தேவனை நோக்கி ஜெபித்த ஜெபத்தில் காணப்படும் மையத்தை அதாவது அதன் சாராம்சத்தைப் பாருங்கள். அது முற்றிலும் அவனை வெறுமையாக்கி ஏறேடுக்கப்பட்ட ஜெபம். அநேகர் தேவனை நோக்கி ஜெபிக்கும்போது அவர்கள் அதற்கு பதிலைப் பெற தகுதியானவர்கள் போல ஜெபிக்கிறார்கள். அருமையானவர்களே! மெய்யாலும் தங்கள் பாவத்தன்மையையும் தேவனுடைய பரிசுத்தத் தன்மையையும் இருதயப்பூர்வமாக விளங்கிக் கொள்ளுகிறவர்களின் ஜெபம் இப்படியாகவே இருக்கும். இவ்விதமான ஜெபம் நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்திலிருந்து தான் வரும். அவ்விதமான இருதயத்தை மட்டுமல்ல, அதிலிருந்து ஏறெடுக்கப்படும் ஜெபத்தையும் தேவன் புறக்கணிக்கமாட்டார் (சங் 51:17)

            தேவன் இரக்கமுள்ளவர் என்பதையும் அவருடைய இரக்கங்களைச் சார்ந்து வாழும்படியான வாழ்க்கையையும் நாம் எப்பொழுதும் கொண்டிருக்கவேண்டும். எந்த ஒரு மனிதன் தன் சொந்த நீதியை நம்பிக்கொண்டிருக்கின்றானோ, அவன் ஒருபோதும் தேவனுடைய இரக்கத்தைச் சார்ந்துக்கொள்ளமாட்டான். தேவன் மோசேயை நோக்கி: ‘எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன். ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்’ (ரோமர் 9:15,16) என்று சொன்னார். நீங்கள் கர்த்தருடைய இரக்கத்தை எல்லா சூழ்நிலைகளிலும் சார்ந்து கொள்ளுங்கள். அது உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தும். உன்னுடைய சொந்த நீதி உனக்கு உதவாது. “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே………..நம்மை இரட்சித்தார்” (தீத்து 3:5). நீ மெய்யாலும் இரட்சிப்பை பெறவேண்டுமானால் தேவனுடைய இரக்கத்தைச் சார்ந்து கொள். ஆண்டவரே! நான் ஒரு பாவி. என் நீதி கந்தையானது. உம்முடைய நீதியினால் என்னை ஆட்கொண்டருளும் என்று ஜெபியுங்கள். தேவன் இரட்சிப்பார்.