“என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே” (ஏசாயா 41:8).

தேவன் தம்முடைய மக்களை இவ்விதமாக அழைக்கின்றதை நாம் பார்க்கும்பொழுது, அவருடைய மக்கள் அவருக்கு மிகப் பிரியமானவர்கள் என்று விளங்கிக்கொள்ள முடியும். ஒரு தாய் தன் சிறு குழந்தையைப் பல பெயர்கள் வைத்து அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். ஏனென்றால் அவள் தன் குழந்தையின் மேல் மிகுந்தப்  பிரியத்தை வைத்திருக்கிறாள். அருமையானவர்களே! தேவனும் தம்முடைய பிள்ளைகளில் அவ்விதமாகவே சந்தோஷப்படுகிறார். அவருக்கு அவருடைய பிள்ளைகள் எப்போதும் சிறுபிள்ளைகளே. தம்முடைய பிள்ளைகளை அவ்வாறு அழைப்பதில் அவர் பிரியம் கொள்ளுகிறார். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்றால் நமக்கு எவ்வளவுப் பெரிய சிலாக்கியம் என்பதை எண்ணிப்பார்ப்போம்!  யாக்கோபு தேவனைத் தெரிந்து கொள்ளவில்லை. நாம் ஒருக்காலும் நம்முடைய வாழ்க்கையில் தேவனைத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் தேவன் நம்மை தெரிந்துகொள்ளுகிறவராக இருக்கிறார். ஆகவேதான் “நான் தெரிந்துகொண்ட யாக்கோபே” என்று அழைக்கிறார். நாம் தேவனால் தெரிந்துகொண்டவர்களாய் இருப்பதின் நிமித்தமாக அவருடைய பார்வையில் நாம் விசேஷித்தவர்களாக இருக்கிறோம். என்ன ஒரு அருமையான சிலாக்கியம்! மேலும் என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே என்றும் சொல்லுகிறார். தேவனுடைய பிள்ளைகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக விசேஷித்த அந்தஸ்த்தை தேவன் கொடுக்கிறார். கிறிஸ்துவின் பலியின்மூலமாக, அவருடைய மீட்பின் மூலமாக அவருடைய அன்பிற்குரியவர்களாகிய தம்முடைய பிள்ளைகள் அவரால் சிநேகிக்கப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். இந்த மகாப் பெரிய சிலாக்கியத்தை நாம் எண்ணிப்பார்க்கும்பொழுது தேவன் நம்மை மிக அதிகமாய் நேசிக்கிறார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.