கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் : 5       மான்கால்களைப் போலாக்குவார்      (ஆபகூக் 3:10-19)

“ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்”(ஆபகூக் 3:19)

    ஆபகூக் தீர்க்கதரிசி மிகவும் நெருக்கமான காலத்தில் கடந்து போன வேளையில் இவ்விதம் எழுதியிருக்கிறார். அவர் சந்திக்கிற பிரச்சனைகள், இழப்புகள் பெரிது. சரியான பலனை நிலத்தில் பார்க்கமுடியவில்லை, எதிர்பார்ப்புகள் வீணாய்ப்போயின. ஆனாலும் தீர்க்கத்தரிசி ‘கர்த்தர் என் பெலன்’ என்று சொல்லுகிறார். ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் இவ்விதம் சொல்லமுடியும். காலங்கள், சூழ்நிலைகள் மற்றும் எல்லாம் மாறிவிடலாம். மனிதர்கள், இயற்கை சூழ்நிலைகள் மாறலாம். தேவன் ஒருபோதும் மாறாதவர். அவர் வல்லமை மாறிப்போகாது. ஆகவே தான் தேவனை அறிந்த ஒரு மனிதன் எல்லா சூழ்நிலையிலும் தேவனையே தன் பெலனாகக் கொண்டிருப்பான். செல்வங்களும் மற்றவைகளும் சேர்ந்தாலும் அவன் நம்பிக்கை அவைகள் பேரிலல்ல, அவைகளை அருளின தேவன் பேரிலேயே இருக்கும்.

    மான் மிகவும் வேகமாக ஓடும் ஒரு பிராணி. அவைகள் வேகமாக ஓடுவதற்குக் காரணம் அவைகளின் பெலமுள்ள கால்களே. காடுகள், மலைகள், கற்பாறைகள் எதுவாயிருந்தாலும் அவைகளில் மிக வேகமாக ஓடக்கூடிய விதத்தில், அவைகளின் கால்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குதித்துக், குதித்து அவைகள் ஓடுவது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். எதிரிகளிடமிருந்தும், கொல்ல வரும் கொடிய மிருகங்களிடமிருந்தும் இவ்விதம் வேகமாக ஓடி இந்த மான்கள் தப்பித்துக்கொள்ளும்.

    தீர்க்கதரிசி அவ்விதமாக தேவன் தன் கால்களை மான்களின் கால்களைப் போலாக்குவார் என்று சொல்லுகிறார். இன்றைக்கு ஒருவேளை நீ ஓடமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாயா? பயப்படாதே! தேவன் அவ்விதம் மாற்ற வல்லமையுள்ளவராயிருக்கிறார். அவ்விதம் மாற்றுவது மாத்திரமல்ல, உயரமான ஸ்தலங்களில் உன்னை நடக்கப்பண்ணுவார். இந்த வாழ்க்கையில் கீழாக இழுக்கும் எல்லா வல்லமைக்கும் மேலே எழும்பி உயர நடக்கப்பண்ணுவார். இதை நீ நம்பு.