செப்டம்பர் 17
‘நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போனவழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.’ (1 இராஜா 13 : 17).
இந்தத் தீர்க்கத்தரிசியின் வாழ்க்கை ஒவ்வொரு விசுவாசிக்கும் ஊழியனுக்கும் எச்சரிக்கையாயிருக்கிறது. பெத்தேலிலும், தாணிலும் கன்றுக்குட்டிகளை வைத்து, அவைகளுக்கு மேடைகளை அமைத்து பலியிட செய்தவன் இஸ்ரவேலின் ராஜாவான யெரோபெயாம். யெரோபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நிற்கையில் அதற்கு அடையாளமாக பலிபீடம் வெடித்து அதின் மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம் என்று இந்த தீர்க்கத்தரிசி சொன்னான். இந்த வார்த்தையை ராஜாவாகிய யெரோபெயாம் கேட்டபோது அவனைப் பிடியுங்கள் என்று தன் கையை பலிபீடத்திலிருந்து நீட்டினான். அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று. தேவனுடைய மனுஷன் சொன்னபடியே பலிபீடம் வெடித்துச் சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டு போயிற்று.
அப்பொழுது ராஜா தனக்காக வேண்டிக்கொள்ளும்படி தேவனுடைய மனுஷனைக் கேட்டுக்கொண்டான். அவ்விதமாக விண்ணப்பம் செய்தபோது ராஜாவின் கை முன்னிருந்தபடியே சீர்ப்பட்டது. அப்பொழுது ராஜா, வீட்டுக்கு வந்து இளைப்பாறு உனக்கு வெகுமானம் தருவேன் என்று சொன்னபோது தேவனுடைய மனுஷன் என்ன பதில் சொன்னான்? ‘அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் போனவழியாய்த் திரும்பிவராமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்’ என்று சொன்னான். இவ்விதம் உறுதியாயிருந்த இந்த தேவனுடைய மனுஷன் எப்படி ஒரு பொய் ஊழியனால் ஏமாற்றப்பட்டான் என்பதையும் அவனுடைய துக்ககரமான முடிவையும் பார்க்கிறோம்.
எந்த ஒரு விசுவாசியும், ஊழியனும், தேவனுடைய வார்த்தையில் உறுதியாயிராவிட்டால் அவன் வீழ்ந்துபோவது உறுதி. இன்றைக்கும் எத்தனை மக்கள் பொய் ஊழியர்களின் வார்த்தைகளை நம்பி மோசம்போய்கொண்டிருக்கிறார்கள். நீ தேவனுடைய வார்த்தையை உறுதியாய் பற்றி சார்ந்துகொள்வதை விட்டுவிடாதே.