ஜனவரி 29                          மனநிறைவான வாழ்க்கை                யோவான் 6:22-59

“ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான்,

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோவான் 6:35).

      ஆண்டவராகிய இயேசு ‘என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான்’ என்று சொல்லுகிறார். சரீரப்பிரகாரமாக நாம் ஒவ்வொரு நாளும் பசி அடைகிறோம். இன்றைக்கு நாம் உட்கொள்ளும் உணவு நாளைக்கு போதுமானதாக இருப்பதில்லை. அதேபோலத்தான் தாகம் நம்முடைய சரீரத்தில்  இருக்கும் ஒரு தன்மையாக இருக்கிறது. இது உலகப்பிரகாரமான வாழ்க்கையின் நிலையை வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது. இந்த உலகத்தில் நாம் எவ்வளவு சம்பாதித்தாலும், பொருட்களை பெற்றிருந்தாலும் அதனால் நாம் ஒருக்காலும் திருப்தி அடைவதில்லை. இந்த உலக வாழ்க்கை என்பது நிரந்தரமற்ற திருப்தி இல்லாத வாழ்க்கையாகும்.

      ஆண்டவர் இந்த வசனத்தில் ஆவிக்குரிய பசியும் தாகமும் எப்படி போக்கிக்கொள்ள முடியும் என்பதை விவரிக்கிறார். இதுவே இந்த உலகத்தில் மெய்யான ஆவிக்குரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. இந்த உலகத்தின் சாபமான பாவம் ஒரு மனிதனை திருப்தியின்மைக்குள் கொண்டு செல்கிறது. நாம் விரும்பி பெற்றுக் கொள்கிற பொருட்களும்,  ஒருக்காலும் நம்மை திருப்திப்படுத்துவதில்லை. ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவின் பக்கமாக செல்லும்பொழுது மெய்யான ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையையும் நிலையான சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்வோம். “அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்” (ஏசாயா 49:10). கர்த்தருடைய கரத்தில் நம் வாழ்க்கை காணப்படும்பொழுது மனநிறைவான வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வோம். கர்த்தரின் ஆளுகைக்கும், வழிநடத்தலுக்கும் உட்படாத வாழ்க்கை எப்பொழுதும் வறட்சியே. நம் வழிகளை ஆராய்ந்து பார்ப்போம். கர்த்தரிடத்தில் செல்லுவோம்.