ஜனவரி 12              ஆபத்தா?              ஓசியா 5:1-15

“அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும்

நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள்

ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள்” (ஓசியா 5:15).

      ஆண்டவர் மறைவானவர் போல இன்றைக்கு நமக்கு காணப்படுகிறாரா? நம்முடைய வாழ்க்கையில் நாம் கடந்து போய்க் கொண்டிருக்கிற சூழ்நிலையில் தேவன் நம்மை மறந்துவிட்டார் என்று எண்ணி கொண்டிருக்கலாம். ஆம்! தேவன் தம்மை மறைத்துக் கொண்டது உண்மைதான். எதற்காக அவ்விதம் இருக்கிறார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வேதம் சொல்லுகிறது நாம் தேவனைக் கருத்தாய் தேட வேண்டும். அன்பானவர்களே! நாம் நம்முடைய ஆபத்தில் கர்த்தரைத் தேடுகிறோமா? அல்லது மனிதர்களின் ஆலோசனைகளை நாடி போகிறோமா? நாம் நம் குற்றங்களை உணர்ந்து தேவனைத் தேடும் மட்டும் அவர் நமக்கு மறைவானவராகத் தான் இருப்பார்.

      ஒருவேளை நாம் இந்நாட்களில் ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியங்களை செய்து வந்திருக்கலாம். ஆண்டவருக்கு விருப்பமில்லாத வழிகளில் நாம் நடந்து கொண்டிருக்கலாம். பாவத்தை மிக சாதாரணமாக குற்ற உணர்வில்லாமல் செய்து வந்திருக்கலாம். இது நிர்பந்தமான வாழ்க்கை. நாம் ஏன் இன்னும் நிர்பந்தமான நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்? தேவனுடைய கோபம் நம்மேல் பற்றி எரிகிறது என்பதை நாம் முந்தி அறிய வேண்டும். தேவன் நம் குற்றங்களை உணர்ந்து அவர் முகத்தை நாம் தேடும் மட்டும் நமக்கு வெளிப்படமாட்டார். நாம் குற்றங்களை உணராதிருக்கும்போது ஆபத்துக்கள் அதிகரிக்கும் என்பதை இந்த வசனத்தின் மூலம் உணர வேண்டும். தேவனுடைய கோபத்தை நாம் ஏன் இன்னும் சுமக்க வேண்டும்? ஆபத்துக்கள் நம்மேல் வரும்பொழுது தேவனுடைய கோபம் இருக்கிறது என்பதை அறிந்து, நம் பாவங்களை உணர்ந்து அவர் பக்கமாக திரும்பக்கடவோம். அப்பொழுது தேவன் நம்மைத் தேற்றுகிறவராக இருக்கிறார். ஆகவே நாம் கஷ்டங்கள் பாடுகள் ஊடாகக் கடந்து போகும்பொழுது, நாம் தேவனைத் தேட வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் அவர் நமக்கு அனுமதித்திருக்கிறார் என்று நாம் அறிய வேண்டும்.