ஏப்ரல் 25
“என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்” (சங்கீதம் 30:2).
சங்கீதக்காரன் தன்னுடைய வாழ்க்கையில் அதிகமான நெருக்கத்தைக் கடந்து போனதை நாம் பார்க்கிறோம். அதற்கு முந்தைய வசனத்தில் ‘கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல்’ என்று சொல்லுகிறார். அநேக போராட்டங்கள், சத்துருக்களால் பலவிதமான நெருக்கங்கள், இவைகளின் மத்தியில் சங்கீதக்காரன் தேவனை நோக்கிக் கூப்பிடுகிறார். நம்முடைய வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் கஷ்டத்திலும் எந்த வேளையிலும் தேவனை மாத்திரமே நோக்கிப் பார்க்க வேண்டும். அநேக பாடுகள் கஷ்டங்கள் வரும்பொழுது அநேகருடைய வாழ்க்கையில் உடனடியாக தேவனைப் பார்க்காமல் மனிதர்களை நோக்கிப் பார்க்கிற எண்ணம் எழும்புகிறது. அது தவறானது.
அது மட்டுமல்ல ‘என்னை நீர் குணமாக்கினீர்’ என்று சொல்லுவது அவருடைய ஆத்துமத்தில் குணத்தைக் கொடுக்கிறதைக் குறிக்கிறது. ஆத்துமத்தில் ஆரோக்கியத்தைக் கொடுத்தீர் என்று பொருள்படுகிறது. நம்முடைய சரீரத்தில் குணம் கர்த்தர் கொடுக்கிறவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனாலும் நம்முடைய ஆத்துமத்தில் சுகம் தேவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. “என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது” (சங்கீதம் 6:2) என்று சொல்லுகிறார். ஆண்டவரை நோக்கி நாம் கூப்பிடுவது மாத்திரமல்ல, நம்முடைய உண்மை நிலையை ஆண்டவரிடத்தில் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். நம்முடைய பாரங்கள், மன வேதனைகள், பாவங்கள் எல்லாவற்றையும் நாம் ஆண்டவரிடத்தில் எடுத்துச் சொல்லி அவரை நோக்கிக் கூப்பிட வேண்டும். அப்படி நாம் கூப்பிடும்பொழுது “நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்” (சங்கீதம் 51:8) என்று சொல்லுகிறார். ஆம்! உள்ளான நெருக்கம், போராட்டங்கள் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பொழுது கர்த்தர் நம்மைக் குணமாக்குகிறார்.
மேலும் ஆத்தும குணம் என்பது இரட்சிப்பை குறிப்பதாக இருக்கிறது தேவன் நம்மை குணமாக்கினார் என்று சொல்லும்பொழுது நம்முடைய ஆத்தும மரணத்தை நீக்கி ஜீவன் கொடுத்து குணமாக்கினார் என்பதும் அர்த்தமாய் இருக்கிறது அதுவே தேவன் நமது ஆத்துமாவை இரட்சித்திருக்கிறாரா என்பதைக் குறித்தும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது