ஆகஸ்ட்  1 

“நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார்” (சங் 3:4).

தாவீது தன் சொந்தக் குமாரன் அப்சலோமுக்குத் தப்பி ஓட வேண்டிவந்தது. தாவீது தனக்கு இவ்விதம் நேருமென்று ஒருக்காலும் எதிர்பார்த்திருக்கமாட்டான். ஒருவேளை உங்களுக்கும் இவ்விதமான காரியங்கள் நேரிடாது என்று எண்ணவேண்டாம். இன்றைய சமுதாயத்தில் தங்களுடைய பிள்ளைகளை நம்பி பெற்றோர்கள் செயல்பட முடியாததாய் இருக்கிறது. தங்கள் சொந்த பிள்ளைகளை சார்ந்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் எத்தனை பெற்றோர்கள் வாழவேண்டியுள்ளது. இது உங்களுக்கு புதுமையாக இருக்கவேண்டாம். தாவீதும்கூட இந்த பாதையில் கடந்துப்போனார். அப்சலோமைக்குறித்து சொல்லுகிற வேளையில் “சத்துரு” என்று சொல்லவேண்டிய நிலையில் தாவீது தள்ளப்பட்டார். தேவனை நம்புவதற்குப் பதிலாக உங்கள் பிள்ளைகளை நம்பாதீர்கள். அது உங்களுக்கு ஏற்றதாக இருக்காது.

இவ்விதமான வேளையில் தாவீது தேவனையே நோக்கிப்பார்த்து தன் விசுவாசத்தை உறுதிபடுத்திக்கொள்ளுகிறார். “ஆனாலும் கர்த்தாவே நீர் என் கேடகமும், என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.” (சங்கீதம் 3:3) அநேகர்,  தங்கள் சொந்த பிள்ளைகளே தங்களை ஆதரிக்கவில்லை, தங்களுக்கு எதிராய் எழும்பி விட்டார்கள் என்கிற வேளையில்தான் அதிகமாய் சோர்ந்துப் போகிறார்கள். தாவீது இந்த சூழ்நிலையில் தன் விசுவாசத்தை நிலைப்படுத்துகிறார்.  “ஆனாலும் கர்த்தாவே நீர் என் கேடகமும்……” நீ உன் வாழ்க்கையில் அவ்விதம் உன் விசுவாசத்தைக் கர்த்தருக்குள் நிலைப்படுத்திக்கொள். இந்தவிதமான நெருக்கமான நேரங்களில் அவைகள் நீ தேவனுக்கு நெருக்கமாய் வரும் வேளையாய் இருக்கட்டும். இந்தவேளையில் தாவீது,” கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்,  கர்த்தர் எனக்கு செவிகொடுத்தார்,” என்று சாட்சியிடுகிறார். தேவன் உன் நெருக்கமான வேளையில் உன் ஜெபத்தை தள்ளமாட்டார். தேவனை முதலாவது வைக்கும்பொழுது, நாம் அநேக ஏமாற்றங்களுக்கு விலகி காத்துக்கொள்ளப்படுவோம் என்பதை மறவாதே.