ஜூன் 4
“இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” (லூக்கா 23:28).
இயேசுகிறிஸ்து சிலுவையை சுமந்து சென்ற வேளையில், எருசலேம் பெண்கள் அதைக்கண்டு அழுகிறார்கள். அப்பொழுது இயேசு ‘நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’ என்று சொல்லுகிறார். நம் வாழ்க்கையில் நாம் நமக்காகவும், நம் பிள்ளைகளுக்காகவும் அழ வேண்டிய காரியங்கள் உண்டு. நமக்காக நாம் ஏன் அழ வேண்டும்? நம்முடைய பாவங்களுக்காக நாம் அழ வேண்டியவர்களாக உள்ளோம். நம்முடைய பாவத்தின் விளைவு ஏற்படுத்துகிற காரியங்களுக்காக நாம் அழவேண்டியவர்களாக இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய ஆத்தும இரட்சிப்புக்காக நாம் அழ வேண்டியவர்களாக இருக்கிறோம். மனந்திரும்புங்கள் என்பதே இந்த இடத்தில் ஆண்டவர் முக்கியமாக அறிவுறுத்துகிற ஒரு காரியமாக இருக்கிறது. நீங்கள் உங்களுடைய பாவத்திற்காகவும், உங்களுடைய இரட்சிப்புக்காகவும் மனந்திரும்புங்கள் என்று சொல்லுகிறார். நாம் நம்முடைய வாழ்க்கையில் இரட்சிப்பைக் குறித்து எந்த அளவுக்கு நம்முடைய இருதயத்தில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோமோ அந்த அளவுக்கு நிச்சயமாக நம்முடைய ஆத்துமாவில் அழுகையோடு, கர்த்தர் பக்கமாகத் திரும்பாமல் இருக்க முடியாது.
அதோடு கூட நாம் நம்முடைய பிள்ளைகளுக்காக அழ ஆண்டவர் கட்டளையிடுகிறார். இன்றைக்கு எத்தனைப் பெற்றோர்கள் இந்த கட்டளையை மிகவும் ஆழமாக சிந்தித்து அதன் அடிப்படையில் தன்னுடைய பிள்ளைகளுக்காக அழுகிறவர்களாக இருக்கிறார்கள் என்று நாம் எண்ணிப் பார்ப்போமானால் வெகு சிலர் மாத்திரமே என்று சொல்லக்கூடும். தங்களுடைய பிள்ளைகளுடைய ஆத்துமாவைக் குறித்த பாரத்தோடு அவர்களுக்காக அழுங்கள் என்று ஆண்டவர் சொல்லுகிறார். பொதுவாகப் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் உயர்ந்த வேலைக்குப் போகவேண்டும், நல்ல சம்பளம் பெற வேண்டும் என்கிற உலகப்பிரகாரமான காரியங்களுக்காகக் கருத்துள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் பிள்ளைகளின் ஆத்தும நிலை குறித்து அவர்கள் ஒருபோதும் கவலைக் கொள்ளுவதில்லை. அவர்களுடைய இரட்சிப்புக்காக அவர் சமூகத்தில் பாரத்தோடும் கண்ணீரோடும் ஜெபிக்கிற பெற்றோர்கள் இல்லை. ஒருவேளை இதை வாசிக்கிற நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் உங்களுடைய பிள்ளைகளுக்காக எந்த விதத்தில் பாரமுள்ளவர்காளாக இருக்கிறீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். உங்களின் ஆத்தும நிலையையும், உங்கள் பிள்ளைகளின் ஆத்தும நிலையையும் எப்படியாக இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.