ஜனவரி 9

“அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” (வெளி 2:10).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் நமக்குப் பாராட்டுகிற அன்பும் கிருபையும் எவ்வளவு என்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது, எவ்வளவு ஆச்சரியமுள்ளதாய் இருக்கிறது! நம்முடைய வாழ்க்கையில் இந்த மகத்துவமான கிருபைகளைக் கொடுத்து நம்மை வழிநடத்துகிறார். அதோடுகூட இந்த உலகத்தின் முடிவில், நாம் வாழ்ந்த வாழ்க்கையின் இவ்வளவு பெரிதான ஆசீர்வாதத்தோடுக்கூட, நமக்கு ஜீவகிரீடத்தையும் கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார். தேவன் நமக்குக் கொடுக்கும்படியான வெகுமதிகளில், உன்னதமான ஒன்று ஜீவகிரீடம். இந்த ஜீவகிரீடத்தை நாம் பெற்றுக்கொள்ளும்படியாக, நம்முடைய வாழ்க்கையில் ஓடுவது மிக அவசியம். பவுலும் தன்னுடைய வாழ்க்கையில், இந்த ஜீவகிரீடத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக, தான் ஓடுவதைக் குறித்துச் சொல்லுகிறார். இந்த ஜீவகிரீடம் என்பது நம்முடைய வாழ்க்கையில் தேவன் நமக்கு கொடுக்கக்கூடிய உன்னதமான வெகுமதி. இந்த ஜீவகிரீடத்தை நாம் பெற்றுக்கொள்ளும்படியாக, நாம் அந்த இலக்கை நோக்கி ஓடுவோமாக. பலவிதமான சோதனைகள், நெருக்கங்கள் வரலாம். ஆனால் அதினால் நாம் சோர்ந்துபோகக் கூடாது. “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்” (யாக்கோபு 1:12). ஆண்டவர் நம்மில் அன்புக்கூருகிற அன்புகூருதல் எவ்வளவு மேன்மையானது என்பதைக் குறித்து எண்ணிப்பார்க்கும்போது, இந்த அன்பின் அடையாளமாக, பலனாக நமக்கு ஜீவகிரீடத்தை வாக்குப்பண்ணியிருக்கிறார். “அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்” (1 பேதுரு 5:4). நம்முடைய வாழ்க்கையில் இந்த ஜீவகிரீடத்தைப் பெறும்படியான ஒரு நாள் உண்டு. அதை நோக்கி நாம் நம்முடைய சோதனைகள் மத்தியிலும் நெருக்கங்கள் மத்தியிலும் தளராமல் ஓடுவோம். அப்பொழுது நிச்சயமாகப் பிரதான மேய்ப்பர், தாம் வாக்குப்பண்ணின அந்த ஜீவகிரீடத்தை நமக்குக் கொடுப்பார்.