ஆகஸ்ட் 12
“நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களை பின்பற்றுகிறவர்களாயிருந்து” (எபி 6 :11).
ஆவிக்குரிய அசதி மிகவும் ஆபத்தானது. இன்றைக்கு அநேகர் இவ்விதமாக ஜீவிக்கிறார்கள். ஆங்கிலத்தில் ஆமை ஊறுவதுபோல் ஊறுகிறவர்கள் என்று சொல்லுகிறது. தேவன் தம்முடைய வார்த்தையில் அநேக ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணியிருக்கிறார். அதைப் பெறும் வழியையும் இங்கு சொல்லியிருக்கிறார். அநேகர் ஆசீர்வாதங்களை விரும்புகிறார்கள். இது தவறல்ல. அநேக ஊழியர்கள், ஜனங்கள் மேல் ஆசீர்வாத மழையை பொழிகிறார்கள். அதாவது, ஆசீர்வாதமான வார்த்தைகளை அள்ளிக் கொட்டுகிறார்கள். ஆனால் ஊழியர்களின் வெறும்வார்த்தைகள் ஒருபோதும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவராது. அது தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றதாக இருக்குமானால் மாத்திரமே அது சரியானது.
இவ்விதமாக வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை பெறுவதற்கு இரண்டு காரியங்கள் சொல்லப்படுகிறது. 1. விசுவாசம் 2. நீடிய பொறுமை . இவ்விதமாக ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்த மக்களை நாம் பின்பற்றவேண்டும். நமது விசுவாசப் பிதாக்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை இவ்விதமாகவே பெற்றார்கள். இதுவே நமக்கும் வழியாக இருக்கிறது. முதலாவது, நமக்கு விசுவாசம் தேவை. ஆபிரகாமுக்கு தேவன் “உன் சந்ததியை ஆசீர்வதிப்பேன்” என்று, ஈசாக்கு பிறவாததற்கு முன்பே சொன்னார். ஆபிரகாம் அதை விசுவாசித்தான். தொடர்ந்து விசுவாசத்தோடு காத்திருந்தான். தேவன் அவ்விதமாகவே வாக்குப்பண்ணினபடி கொடுத்தார்.
மேலும், ஆசீர்வாதங்களை பெற நீடிய பொறுமையும், தேவையாய் இருக்கிறது. சிலர் ஆசீர்வாதம் என்றால் உடனே கிடைக்கவேண்டும், இல்லையென்றால் வெகு சீக்கிரத்தில் சோர்ந்துவிடுவார்கள். அது சரியல்ல. தேவன் ஆபிரகாமுக்கு சந்ததியை உண்டாக்குவேன் என்று சொன்ன வாக்குத்தத்தம் நிறைவேற 25 வருடங்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. காலதாமதமானாலும் நீடிய பொறுமையோடு காத்திருப்பாயானால் தேவனுடைய ஆசீர்வாதத்தை நீ பெறமுடியும்.