அரசாங்க வழிமுறைகளை சபைகள் அவசியம் கடைபிடிக்க வேண்டுமா?

ரோமர் 13:1-7

1 பேதுரு 2:13-78

   உலகம் முழுவதும்  கொரோனா பரவல் காரணமாக, சமீபத்தில் சபைகளுக்கு அரசாங்கங்கள் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து  கிறிஸ்தவ உலகில் பல சந்தேகங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இதைப்பற்றி சிந்திப்பது காலதாமதமானது என்று கூட நாம் யோசிக்கலாம். ஆனால், தொற்று பற்றிய சந்தேகங்கள் மேலும் வலுவடைந்துள்ள படியால் நாம் இதை கூர்ந்து  கவனிப்பது தற்பொழுது அவசியமாகிறது.

   இந்த எதிர்பாராத  சூழல் சபை ஐக்கியத்தையும், ஞாயிறு பள்ளி ஊழியத்தையும், ஏன் சுவிசேஷ பணியையும் கூட  பாதித்திருக்கிறது.  இதை நிச்சயமாக யாரும் விரும்புவதில்லை; தொடர வேண்டும் என்றும் நினைப்பதில்லை. இன்று உலகின் பல இடங்களில் உள்ள சுவிசேஷ கிறிஸ்தவர்கள் இதைப் பற்றி இணைந்து விவாதிக்கலாம் என்று கூடப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். எப்படியெனில், நம்முடைய செயல் சரிதானா? கிறிஸ்துவால் ஆளப்படுகிற சபையானது, இந்த உலக ராஜ்யத்தினுடைய நிர்பந்தங்களுக்கு அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கலாமா?  போன்ற கேள்விகளை முன் வைக்கிறார்கள். வேதத்தின் அடிப்படையில் சபைகள் ஏற்றுக் கொண்டிருக்கும், விசுவாச அறிக்கையை கவனிக்க தவறுவதே, இந்த கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்க இயலாத நிலையை ஏற்படுத்துகிறது. சபைகளுக்கு வேதத்தின் அடிப்படையில்  விசுவாச அறிக்கை  இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம். தனிப்பட்ட மனிதனின் விருப்பு, வெறுப்பின் அடிப்படையிலான கோட்பாடுகளோடு தான்  இன்று பெரும்பாலான சபைகள் இயங்குகிறது. வெஸ்ட்மின்ஸ்டர்  விசுவாச அறிக்கை அல்லது பாப்திஸ்து விசுவாச அறிக்கைகள், நாம் வேதபூர்வமாக  இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் பெற உதவி செய்கிறது.

   கடவுளுடைய ராஜ்யமும், உலகத்தினுடைய ராஜ்யங்களும்  எதிரெதிர் துருவங்களானபடியால் இணைந்து செயல்பட முடியாது என்று சுலபமாக நாம் இதற்கு பதில் சொல்லிவிடலாம். உலக அரசாங்கங்கள் சொல்வதைக் கேட்டு  சபை தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டாம்  என்றும், சபையிலே கிறிஸ்துவின் அதிகாரத்தை புறந்தள்ளி, அதன் அடிப்படையில்  அவருடைய அதிகாரத்தை உலகத்திடம்  கொடுக்க முடியாது என்றும் நாம் வாதிடலாம்.

   சமீபத்தில் அமெரிக்க தேசத்தின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு சபை மேற்கூறிய அடிப்படையில், சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் தங்களுடைய ஆலய ஆராதனையை மீண்டும் நடத்தினதைப்  பற்றி நீங்கள் ஒரு சிலர் படித்திருப்பீர்கள். இந்த சபையின் போதகர் அதற்கு முன்வைத்த வாதம் பின்வருமாறு இருந்தது:  சபை மற்றும் உலகம் என்று இரண்டு ராஜ்ஜியங்கள் இருக்கிறதல்லவா? நம்முடைய ஆராதனைகளை அரசாங்கத்தின் கட்டளைப்படி நிறுத்திவைப்பதைவிடவும், ஆலயத்தை திறப்பதன் மூலம்  கிறிஸ்துவின் அதிகாரத்திற்கு கீழ்ப்படிந்து அவருடைய ராஜ்யத்தை நிலை நிறுத்த வேண்டியது அவசியம் அல்லவா? என்றார்.

   முதலாவது, நான் மேற்கூறிய விசுவாச அறிக்கையிலிருந்து ஒன்றிரண்டு வார்த்தைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

   “சர்வ உலகத்தையும் ஆளுகிற ராஜாவும், கர்த்தருமான ஜீவனுள்ள தேவன் தமது மகிமையை முன்னிட்டு,  அரசாங்கங்களையும், ராஜாக்களையும் ஜனங்களின்  நன்மைக்காக தமது ஆளுகையின்  கீழ் அனுமதித்திருக்கிறார். இதினால்,  நாம் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல; மனசாட்சியின்படியும் தேவனால் அனுமதிக்கப்பட்ட மேலான அதிகாரங்களுக்கு ஒப்புக் கொடுப்பதும், அப்படிப்பட்டவர்களுக்காக விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் ஏறெடுப்பதும்  நம்முடைய கடமையாய் இருக்கிறது”.  இதுதான் அந்த விசுவாச அறிக்கையின் வாசகம்.

   மேலே குறிப்பிடப்பட்ட இந்த விசுவாச அறிக்கை ரோமர் 13:1-7 மற்றும் 1 பேதுரு 2:13-18 போன்ற வசனங்களின் அடிப்படையில்,  உலக மனிதர்கள் மாத்திரமல்ல;  விசுவாசிகளும் மேலான அதிகாரங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதை  தேவன் நிர்ணயித்து இருக்கிறார் என்று வரையறுத்துள்ளது. ஒரு வரைமுறையோடு கூடிய அரசாங்கம் தேவை என்ற ஒரு விருப்பத்தை மனித இருதயத்தில் தந்து, அதன் அடிப்படையில் செயல்படுவதற்கான சிந்தையையும் மனிதன் பாவத்தில் விழுந்ததற்கு பின் தேவன் கட்டளையிட்டிருக்கிறார். நம்முடைய சரீர தேவைகள், சட்ட ஒழுங்கு வழிமுறைகள், ராணுவம், பொது சுகாதாரம்  போன்ற நன்மைகளுக்கு அரசின் செயல்பாட்டில் மற்ற ஜனங்களோடு தம்மால் மீட்கப்பட்ட ஜனமும் ஒத்துழைக்க வேண்டும் என்று தேவன் நிர்ணயித்துள்ளார்.  இந்த தேவ நியமமானது, ஒருவகையில் அவருடைய ஆளுகையின் கருவி என்று கூட சொல்லலாம்.

   ஒரு சமயம் விசுவாசியான ஒரு பணக்காரர், தான் அரசாங்கத்திற்கு குறைவான வரி கட்டுவதாக என்னிடம் சொன்ன ஒரு நிகழ்வை இங்கு யோசித்துப் பார்க்கிறேன். தன்னுடைய தொழிலின் வரவு-செலவு  கணக்குகளை குறைத்து மதிப்பிட்டு, அதை அரசுக்கு சமர்ப்பித்து வரி கட்டுவதாக அவர் கூறினார்.  இயல்பாகவே, விசுவாசத்தின் அடிப்படையில்  இது தவறு என்று நான் அவரிடத்தில் சுட்டி காண்பித்தபோது, தன்னை நியாயப்படுத்த அவர் முயற்சித்ததையும் நான் கேட்டேன். அது சரியானதல்ல என்றாலும், ராயன் போன்ற அரசர்கள் தான்   வரி முறைகளை கொண்டு வந்ததாகவும், எனவே, தனது விருப்பப்படி வரி செலுத்துவதற்கு தனக்கு முகாந்திரம் இருக்கிறது என்று அவர் சொன்னார். அதாவது, விசுவாசிகள் அரசாங்க ஆளுகையின் கீழ் வருவது கிடையாது. மாறாக, அவர்கள் நேரடியாக கிறிஸ்துவின் ஆளுகைக்கு  கீழ்  இருக்கிறார்கள் என்ற அவரது சிந்தனையின் வெளிப்பாடுதான் இது என்பது இதிலிருந்து நமக்கு விளங்குகிறது. ஒரு சார்பான வாதமாக  இது இருந்தாலும், நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவென்றால்: பொதுநலன், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார ஆரோக்கியம்  ஆகிய இவைகளைப் பொறுத்த அளவில் ஒவ்வொரு ஆத்மாவும் மேலான  அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் என்பதாகும் என்று ரோமர் 13ம் அதிகாரத்திலிருந்து நாம் அறிகிறோம்.

   வேதாகமத்தில் இரண்டு ராஜ்ஜியங்கள் படம் பிடித்து காண்பிக்க பட்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டு அறிக்கையிடுகிறோம். நம்முடைய விசுவாச நடக்கைகள், ஆராதனை வழிமுறைகள், அடிப்படை கிறிஸ்தவ  நெறிகள், சுய கட்டுப்பாடு போன்ற அம்சங்களை பொறுத்த அளவில், கிறிஸ்து நேரடியாக தமது சபையில் ஆளுகை செய்கிறார். இது உண்மையாயினும்,  இதுவே வேதத்தின்படி முழுமையான படம் கிடையாது. ஏனெனில், அரசாங்க வழிமுறைகள் மற்றும்  நிர்வாகங்களின் மூலமாகவும் தேவன் விசுவாசிகளை ஆளுகிறார் என்று நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

   தூய்மைவாதியான (பியூரிட்டன்) ரிச்சர்ட் பாக்ஸ்டர் என்பவரின் “109வது கேள்வியை” (1665ம் வருடத்திய கிறிஸ்தவ அறிவுரைகள் என்னும் புத்தகம்)  சமீபத்தில் அநேகர் மறுபடியும் பிரசுரித்து, இந்த சூழ்நிலையில் கிறிஸ்தவ நிலைப்பாடு என்ன என்பதை சுட்டிக் காண்பித்திருக்கிறார்கள்.  அந்தக் கேள்வியானது: “அரசாங்கம்  கூடுகைகளை தடை செய்யும் பட்சத்தில் நாம் கர்த்தருடைய நாளில் ஆராதனையை தவிர்க்கலாமா? என்பதாகும். அதற்கான பொதுவான விளக்கம் வருமாறு: “நெருக்கடியான சமயங்களான கொள்ளை நோய் பரவுதல், எதிரிகளிடமிருந்து போர் தாக்குதல், தீப்பிடித்த சூழ்நிலைகள் போன்ற அசாதாரண சூழலில் பொதுநலன் கருதி அரசாங்கம் சபை கூடிவருதலை தடை செய்தால் அதற்கு நாம் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் இருக்கிறது. அதேசமயம் அரசாங்கங்களோ, அதிகாரங்களோ கிறிஸ்துவை மறுதலிக்க வற்புறுத்தும் போதும், விசுவாசத்தை இணைந்து அறிக்கையிடுவதை சாதாரண சூழலில்  தடை செய்யும் போதும் நாம் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் கிடையாது.

   அதேசமயம், இந்த வழிகாட்டுதல் என்பது  எல்லா தரப்பினருக்கும் சமமாக  பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும். சபையை மாத்திரம் தனிப்பட்ட விதத்தில் பாதிக்காமலும், நீண்ட காலம் இல்லாமல் அத்தியாவசியத்தோடு தடை இருக்குமேயானால்  நிச்சயம் நாம்  அரசோடு இணங்கி செயல்பட வேண்டும். சபைக்கு உபத்திரவம் கொடுக்கக்கூடிய நோக்கில் மட்டும் இது இருக்குமானால் நாம்  இதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த வழி முறையைத் தான் கடந்த நூற்றாண்டுகளில் சபை  இக்கட்டான சூழலில் தெரிந்தெடுத்து  வந்திருக்கிறது.

   சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவிலும் மற்றும் உலகின் சில நாடுகளிலும் சபை கூட அனுமதி கொடுக்கப்பட்டாலும் விசுவாசிகள் சேர்ந்து பாடுவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி,  கட்டாயம்  முக கவசம் அணிந்து அச்சமயம் சபைகள் கூட வேண்டியிருந்தது. ஆனால், இந்த நடைமுறை எல்லா மதக் கூடுகைகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் வழிகாட்டுதலாக இருந்தது. இதை கடைப்பிடிக்காத குழுக்களையும், நம்பிக்கை சார்ந்தவர்களையும் நாம் பார்த்து வந்து இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், நடைமுறை எல்லோருக்கும் பொதுவானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். விளையாட்டு மற்றும் தியேட்டர்கள் போன்ற கேளிக்கை   கூடுகைகளுக்கும்  தடை என்பது சொல்லப்பட்டிருந்தது. பொதுவாக, இந்த நிகழ்வுகள் அரசாங்கத்திற்கு வருமானம் தரக்கூடிய அம்சம் என்பதும், சபை கூடுதலை விடவும்  அரசுக்கு லாபம் ஈட்டுவதாக இருந்த பொழுதும், இந்த வழிமுறை அவர்களையும் கட்டுப்படுத்தியது என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.

   மாத்திரமல்ல, பள்ளிகளைத் திறந்தால் அதிக பாதிப்புகள் வரும் என்று அவைகள்  மூடப்பட்டிருந்தது கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். அரசாங்கத்திற்கு ஓரளவிற்கு அதிலேயும் வருமானம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சமீப நாட்களில் வருவாயுள்ள மதுக்கடைகளின் நேரம் குறைப்பதால் தொற்றின் வேகத்தை குறைக்க முடியும் என்று குரல்கள் வந்ததையும் நாம் அறிவோம்.

   மேற்குறிப்பிட்ட கலிபோர்னியா சபையானது, இந்த சமநிலை அணுகுமுறை  இல்லாமல் இருந்த படியினால் தங்களுடைய எதிர்ப்பை காண்பித்து சபையை திறந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அதில், நீதிமன்றத்தின் உதவியை முதலாவது  அவர் நாடினதையும்  நாம் இங்கு கவனிக்க வேண்டும். நாம் இதில் அறிந்து கொள்ள வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்த வழிகாட்டு நெறிகள் ஆளுகிறவர்களின் அதிகார வரம்பிற்குள் மற்றவர்களுக்கு மட்டும் பொருந்துமே ஒழிய, சபையை  இது கட்டுப்படுத்த முடியாது என்று நாம் வாதிட முடியாது. இப்படி சொல்வதன் மூலம், கடந்த நூற்றாண்டுகளில் இதேபோல் கொள்ளை நோய்களையும், போர் சூழலையும் சபை எப்படி எதிர்கொண்டது என்பதைப் பற்றி நாம் சரித்திரத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுக்கிறது போல் ஆகிவிடும்.

   மற்ற மனிதர்களைப் போல விசுவாசிகளாகிய நாமும் கடினமான  சூழ்நிலையின் தாக்கங்களை யதார்த்தமாக கடந்து போக வேண்டியிருக்கிறது. இக்காலகட்டங்களில் வித்தியாசமான வழிமுறைகள் வாயிலாக கடவுளுடைய வார்த்தையை நாம் அறிவிக்கவும், தனிநபர்களுக்கு குறுகிய கால அளவில் சுவிசேஷத்தை அறிவிக்கவும் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

   அதேசமயம், கொரோவினால் விளைந்த கட்டுப்பாடு நெறிகள் முகாந்தரமின்றி அதிக காலம்  நீட்டிக்கப்பட்டாலோ, சபைகளை மாத்திரம் பாதிப்பதாக  இருந்தாலோ, நிச்சயமாக  நம்முடைய எதிர்ப்பை காட்டுவது அவசியமாகிறது. தொற்று நோய் பரவுவதற்கு சபையும் பொறுப்பில்லாமல்  காரணமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு இன்றைய கால கட்டத்தில் நாம் காரணமாகி விடக்கூடாது. இரண்டாம் உலக மகா யுத்த சமயத்தில் 41 வயதிற்கு மேற்பட்டவர்கள் சண்டையை  முன்னிட்டு 5 வருடகாலம் குடும்பத்தை பிரிந்து இருந்ததைப் போன்ற ஒரு போர் சூழல் இன்றைக்கு இல்லை என்பது நிதர்சனம். முதல் நூற்றாண்டிலும் இன்னும் பல காலகட்டத்திலும் ஒளிந்து, திரிந்து ஆராதனை நடைபெற்றதைப் போன்ற நிர்பந்தம் இன்றைக்கு நம்மிடையே இல்லை. மாறாக, கடவுளுக்கு நன்றி உள்ளவர்களாக தேசத்தின் நன்மையை முன்னிட்டு நம்மை பராமரித்து, மற்றவர்களுடன் இணைந்து பொது நன்மைக்காக செயல்பட வேண்டிய பொறுப்பும் இன்று நமக்கு இருக்கிறது.

   ரோமர் 13:1ம் வசனம்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரத்திற்கு கீழ்ப்படியக்கடவன்”. இந்த வசனம் அவிசுவாசிகளுக்கு மாத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது; சபைக்கானது அல்ல என்னும் வியாக்கியானம் நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. “எந்த மனுஷனும்” என்று இங்கு சொல்லப்பட்ட வார்த்தை விசுவாசிகளையும், அவிசுவாசிகளையும் இணைத்தே சொல்லுகிறாய் இருக்கிறது. பவுல் தொடர்ந்து சொல்கிறார்:  தேவனால் அன்றி ஒரு அதிகாரமும் கிடையாது”. இந்த கடிதத்தை ரோமாபுரி சபைக்கு பவுல் எழுதிய போது அன்று அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்கள் விக்கிரக வணக்கத்தை கட்டாயப்படுத்தினவர்களும், பொறுப்பற்றவர்களும், ஏன் சர்வாதிகாரியான நீரோ மன்னனே ஆட்சி செய்த காலமாகவும் இருந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இருந்தபோதும், அதிகாரத்தை எதிர்ப்பது தேவனையே எதிர்ப்பது போலாகிவிடும் என்று பவுல் சொல்கிறார். எனவே, அரசாங்கத்திற்கு முரண்பாடாக நிற்க நாம் யோசிக்கும்போது ஆழமாக சிந்தித்து அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும். தேவனால் அனுமதிக்கப்பட்ட ஆளுகையை  எதிர்ப்பது, தேவனுடைய கோபத்தை நாம் வருவித்துக் கொள்வது போல் ஆகிவிடும் என்றும் இந்த அதிகாரத்தில் பவுல் சொன்னதை நாம் மறந்து விடக்கூடாது.

   ரோமர் 13:5 “ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்”. இங்கு கோபாக்கினை என்பது அரசாங்கத்தினுடைய தண்டனை என்று பொருள்படும். இந்த சூழ்நிலைகளில் நாம் மனசாட்சியினிமித்தம் அரசாங்கத்திற்கு கீழ்ப்படியாமல் இருப்பது, தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருப்பது போல் ஆகிவிடும் அல்லவா?

   வேதத்தில் அரசாங்களுக்கு கீழ்ப்படிவதைக்  குறித்து சில வரம்புகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது  என்பதை நாம் கவனிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையை அறிவிப்பதை ஒரு அரசாங்கம் தடை செய்யுமானால், அந்த சூழலில் மனுஷருக்கு கீழ்ப்படிவதைக் காட்டிலும்  தேவனுக்கு கீழ்ப்படிவது அவசியமாகிறது. நாம் எப்படிப்பட்ட போதனைகளை சபையில் பிரசங்கிக்க வேண்டும் என்று ஒரு அரசாங்கம் தீர்மானித்தால் நாம் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், ஓரின சேர்க்கை திருமணம் மற்றும் கடவுள் இல்லாமல் மனித இனம் தானாகத் தோன்றியது போன்ற வேதத்திற்கு புறம்பான  கொள்கைகளை சபை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தும் பட்சத்தில், நாம் அதை உடனடியாக மறுத்து தேவனுக்கு மட்டும் கீழ்ப்படிய அழைக்கப்படுகிறோம். அதேபோல், தனிப்பட்ட கிறிஸ்தவ ஒழுக்க நெறிகளையும், சபையின் அடிப்படை உபதேசங்களையும், சுவிசேஷ சாராம்சத்தையும் மாற்றும்படி அரசாங்கம் நம்மை வற்புறுத்துமானால்  நாம் அதை அங்கீகரிக்க முடியாது.  இப்படிப்பட்ட இக்கட்டான சமயங்களில் அப்போஸ்தலர்கள் எப்படிப்பட்ட நிலையை எடுத்தார்கள் என்பதை அப்போஸ்தலர் 4 மற்றும் 5 அதிகாரங்களில் தெளிவாகப் படிக்கிறோம்.

   1 பேதுரு 2:13  “நீங்கள் மனுஷருடைய  கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள்”. தொடர்ந்து 15ம் வசனம்  “நீங்கள் நன்மை செய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது”. சபை முரண்பாடாக எதையாவது செய்யும் பட்சத்தில் அதை சுட்டிக் காண்பிப்பதற்கு அதிக முனைப்போடு சபைக்கு வெளியே அநேகர் இருக்கிறார்கள்.  “இதோ, சபை மக்களைப் பாருங்கள்; அவர்களுக்கு ஜனங்களைப் பற்றி அக்கறை இல்லை; ஜனங்கள் மரிப்பதைப் பற்றி அக்கறை இல்லை என்று பழி சொல்லக் கூடும். இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விசுவாசிகளாகிய  நாம் இடம் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் நாம் எல்லாரையும் கனப்படுத்த வேண்டும்; தேவனுக்கு பயந்து, ராஜாக்களுக்கு கனம் கொடுக்க வேண்டும்” என்று வேதம் அறிவுரைக்கிறது. (1 பேதுரு 2:17).

   1 தீமோ 2:1-2 வசனங்களைக் பற்றி கால்வின் என்ற வேத வல்லுநர் கூறின விளக்கமாவது:

   ராஜாக்களுக்காகவும், அதிகாரத்திலுள்ள யாருக்காகவும் நீங்கள் விண்ணப்பம் பண்ண வேண்டியது என்பது பவுல் சொல்லும் பிரதான புத்தியாகும். அதிகாரங்களும், ராஜாக்களும் இந்த உலகில் மற்றவர்களைவிட  விசுவாசிகளை தான் அதிகம் பகைப்பார்கள் என்பதாலேயே பவுல் இந்த ஆலோசனையை சொல்லியுள்ளார். பவுலின் காலத்திலேயே அரசாங்கங்கள் கிறிஸ்துவின் சபைக்கு விரோதமாக இருந்தவர்கள்தான்.  தங்களுடைய அதிகாரம் மற்றும் பெலம்  இவைகளை வைத்து கிறிஸ்துவின் ராஜ்ஜியத்திற்கு  விரோதமாக செயல்படும் இவர்களுக்காக ஜெபிக்க கூடாது என்று விசுவாசிகள் நினைத்து இருப்பார்கள். எனவேதான், பவுல் இந்த ஆலோசனையை அவர்களுக்கு  கொடுக்கிறதைப் பார்க்கலாம். பாவத்தில் விழுந்த கடின இதயம் கொண்ட மனிதர்களை கூட, அரசாங்கங்கள் வாயிலாக  தேவன் பராமரிக்கிறார் என்று நாம் ஏற்றுக் கொண்டு, கடவுளை நேசிப்பதன் அடையாளமாக அதிகாரத்திற்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும். இதன் முகாந்திரமே, விசுவாசிகள் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிவது மாத்திரமல்ல, அதற்கு மேலாக, தேவனிடத்தில் அவர்களுக்காக மன்றாட வேண்டும் என்பது பவுலின் பிரதான கட்டளையாய்  இருக்கிறது. ஏன் அவர்கள் இரட்சிப்புக்காக கூட நாம் தேவனிடத்தில் மன்றாட வேண்டியது அவசியமாகிறது.

கொரோனா தொற்று (Download PDF)