உலகமெங்கும் கொரோனா | ஒரு வேதாகம பார்வை 1


“சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்படவேண்டும்” (யோவான் 3:14–15)

சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே

இங்கே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒரு மனிதன் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க வேண்டுமானால் அவன் தேவனால் மறுபிறப்பு அடைய வேண்டும் என்கிற உயரிய சத்தியத்தை நிக்கொதேமு என்னும் பரிசேயனுக்கு பல்வேறு பழைய ஏற்பாட்டு வேத வாக்கியங்களிலிருந்து போதிக்கிறார். அதில் பிரதானமான ஒன்று, எண்ணாகமம் 21 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள வனாந்திரத்திலே உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பத்தின் நிகழ்வுவை விவரிக்கிறார்.

தேவன் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து மீட்டு வானாந்திர வழியாய் கானான் தேசத்திற்கு அவர்களை அழைத்து செல்லும்போது நடந்த மிக முக்கியமான நிகழ்வுதான் இது. இஸ்ரவேல் ஜனங்கள் தொடர்ச்சியாக தங்களை மீட்டெடுத்த தேவனுடைய வார்த்தைகளை மீறி, அவரை எதிர்த்து, தொடர்ந்து அவரைக் குறித்து முறுமுறுக்கும்போது தேவன் பல்வேறு நிலைகளில் அவர்களை தண்டித்து, அவர்களின் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தி வந்தார். தேவன் தொடர்ச்சியாக அவர்களை மன்னித்து வந்தபோதும் அந்த ஜனங்கள் அவரை அசட்டை செய்து அவரது அன்பையும், பராமரிப்பையும் ஏளனப்படுத்தினார்கள்.

அப்பொழுது தேவன் அவர்கள் மேல் கோபங்கொண்டு அவர்களை அழிப்பதற்காக கொள்ளிவாய் சர்ப்பங்களை ஜனங்களுக்குள் அனுப்பினார். அவைகள் ஜனங்களை கடித்ததினால் அநேக ஜனங்கள் செத்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஜனங்கள் தங்கள் பாவத்தை விட்டு மனந்திரும்பி தேவனை நோக்கி முறையிட்டபோது, தேவன் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.

அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைத்தான். இந்த பழைய ஏற்பாடு நிகழ்வை முன்னிறுத்தி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மனிதனின் மீட்பிற்கான மிகமுக்கிய சத்தியத்தை நிக்கொதேமுவிடம் தெரிவிக்கிறார்.

அவன் கெட்டுப்போகாமல் – (பாவம் என்னும் தீர்க்கமுடியாத கொள்ளைநோய்)

இந்த வேத வரலாற்று நிகழ்வு நமக்கு சொல்லக்கூடிய முதலாவது அடிப்படை சத்தியம் – மனிதஇனம் தொடர்ந்து கடவுளுக்கு எதிராக பாவம் செய்யும்போது தேவன் தமது கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி அவர்களை இயற்கை சீற்றத்தின் மூலமாகவும், பல்வேறு கொள்ளை நோய்களை அனுப்பியும், நாடுகளுக்கு எதிரான யுத்தங்களை நடப்பித்தும் தண்டிக்கிறார்.
உலக வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் தேவன் பாவிகளான மனித இனத்திற்கு எதிராக தனது கோபத்தை அவ்வப்போது இதுபோல வெளிப்படுத்திகொண்டேதான் இருக்கிறார். இப்படிப்பட்ட தேவனுடைய கோபமானது அவரது பூரணமான கோபமல்ல, இவைகளெல்லாம் வரப்போகிற தேவனுடைய நித்திய கோபமான அவரது ஆக்கினைத்தீர்ப்பிற்கு முன்னோட்டமாகவும் எச்சரிக்கைகளாகவும் மட்டுமே இருக்கிறது.
இவைகள் வெறும் நிழல்களே, வரப்போகிறதே உலக முழுவதிற்குமான நிஜமான நித்திய நரக ஆக்கினை. மனிதன் இயல்பாக அதை குறித்து பெரிதாக சிந்திப்பதில்லை. காரணம் கடவுளைக் குறித்த மனிதனின் எண்ணங்கள் முற்றிலும் தவறானவைகள். அவன் தேவனை இந்த உலக காரியங்களோடும் அதின் படைப்புகளோடும் மட்டுமே ஒப்பிட்டு சிந்திக்கிறவனாக இருக்கிறான். அவன் கருவில் உருவாகும்போதே பாவ இயல்போடு உருவாகிறான் என்று தேவன் கூறுகிறார். பிறப்பிலிருந்து மரணம் வரை அவனது சிந்தையும், பேச்சும், செயல்பாடுகள் முழுவதும் நித்தமும் கடவுளுக்கு முன்பாக அருவருக்கத்தக்கதாயிருக்கிறது. அவனிடத்தில் ஒரு துளிஅளவு கூட தேவன் விரும்புகிற எந்தவொரு நன்மையான காரியமும் இல்லை.

மனிதன் தேவனிடம் வருவதெல்லாம் அவனது சுய தேவைகளுக்காகவும், சுய நன்மைகளுக்காகவும் மட்டுமே. இவைகள் யாரோ ஒருவரைபற்றியோ, அல்லது ஒரு கூட்ட மக்களை பற்றியோ பேசவில்லை. மாறாக இவைகள் இதை வாசிக்கிற உங்களைபற்றியே பேசுகிறது. தயவுசெய்து ஒரு நிமிடம் உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் மனசாட்சியே நீங்கள் பரிசுத்த தேவனுக்கு முன்பாக குற்றவாளிகள் என்று சாட்சி கொடுக்கும். உங்களின் வாழ்க்கை முறையே நீங்கள் எவ்வளவு அசுத்தம் நிறைந்தவர்கள் என்று வெளிப்படுத்தும். உங்களின் ஒவ்வொரு செயல்களினாலும் பரிசுத்தமுள்ள தேவன் கோபம் கொண்டவராகவே இருக்கிறார்.

எந்த நேரத்திலும் அவரால் பிடிக்கப்பட்டு நித்திய அழிவிற்கு செல்ல பாத்திரராயிருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? இப்பொழுதுள்ள கொரோனா நோயினால் அதிகபட்சமாக உங்களுக்கு கிடைப்பது சரீர மரணம் மட்டுமே ஆனால் உங்கள் பாவத்தினால் உங்களுக்கு காத்திருப்பது நித்திய ஆத்மீக மரணமான நரக தண்டனை. வார்த்தைகளினால் விவரிக்க முடியாத அளவுக்கு பயங்கர வேதனைகளும் முடிவில்லா அழுகையும், பற்கடிப்பும் உள்ள இடமே நரகம். இன்று நீங்கள் உங்கள் பாவத்தோடே மரிப்பீர்களானால் உங்கள் முடிவு படுபயங்கரமானதாகவே இருக்கும். ஒருவேளை நீங்கள் இன்று இந்த கொள்ளைநோயிலிருந்து தப்பித்துகொள்ளலாம், ஆனால் தேவனுடைய நீதியான தண்டனையிலிருந்து நீங்கள் ஒருபோதும் தப்ப முடியாது. தொடர்ந்து உங்கள் பாவத்தில் வாழ்வீர்களானால் நித்திய அழிவை நிச்சயம் நீங்கள் சந்தித்தே தீர வேண்டும். நீதியான தேவன் நிச்சயம் உங்கள் பாவத்தினிமித்தம் உங்களை தண்டிக்காமல் விடுவதில்லை என்பதை மறவாதிருங்கள்.

நித்திய ஜீவனை அடையும்படிக்கு

கொள்ளிவாய் சர்ப்பத்தினால் கடிக்கப்பட்ட மனிதன் அழிவை சந்திப்பதை தவிர தன்னை காப்பாற்றிக்கொள்ள வேறு எதுவும் அவனால் செய்ய முடியாது. அதைப்போலவே பாவத்தில் வாழும் ஒவ்வொரு பாவ மனிதனின் நிலையும் உள்ளது.

மனிதனுடைய பாவத்தினால் பரிசுத்தமுள்ள கடவுள் நீதியான முறையில் இந்த முழு உலகத்தையும் அழித்து நிர்மூலமாக்குவதே சரியானதும் நன்மையானதுமாக இருக்கும். ஆனால் நீதி நிறைந்த கடவுள் தமது மகா பெரிதான இரக்கத்தினால் பாவம் நிறைந்த மனித இனத்தை அழிப்பதற்கு பதிலாக அந்த அழிவிலிருந்து அவர்களை மீட்பதற்கான வழியை கிருபையாக ஏற்படுத்தியிருக்கிறார். மனிதனை மீட்கும்படியான எந்தவொரு நிர்பந்தமும் தேவையும் கடவுளுக்கு இல்லை என்பதை மறவாதிருங்கள். முழு மனித இனத்தையும் அவர் நரகத்திலே தள்ளி அவர்களை முற்றிலும் அழித்து போட்டாலும் அவர் நீதியும், அன்பும், இரக்கமும் கொண்ட கடவுள்தான் என்பதை புரிந்து கொள்ள மறவாதிருங்கள். மனிதனை மீட்கும்படியான கடவுளின் செயலானது முற்றிலும் முற்றிலும் அவரது சுய மனமுவந்த கிருபையின் செயலேதவிர வேறொன்றுமில்லை. மனிதன் பாவத்திலிருந்து தன்னை மீட்கும்படியாக கடவுளிடம் கேட்பதற்கும், அவரிடம் முறையிடுவதற்கும் அவனுக்கு எந்தத் தகுதியும் உரிமையும் ஒருபோதும் கிடையாது. அவன் நியாயம் செய்யும் நீதிபதிக்கு முன்பாக வாய் திறக்ககூடாத குற்றவாளியைப்போல் கடவுளுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறான். பாவத்திலிருந்து விடுதலை ஒருபோதும் மனித விருப்பத்தையோ அல்லது மனிதன் செய்கிற எந்த செயலையும் சார்ந்ததல்ல. தேவனே கிருபைகூர்ந்து அவனுக்கான மீட்பின் வழியை ஏற்படுத்தியிருக்கிறார். பாவியான மனிதன் நித்திய ஆக்கினையிலிருந்து மீட்கபட்டு நித்திய ஜீவனுள்ள வாழ்க்கையை பெற்றுக்கொள்ளும்படியான வழியை கடவுளே ஏற்படுத்தியிருக்கிறார். அந்த வழிதான் என்ன?

மனுஷகுமாரன் உயர்த்தப்பட வேண்டும்

கொள்ளிவாய் சர்ப்பதினால் அழிந்துகொண்டிருக்கிற இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் ஏற்படுத்திய மீட்பின் வழி மோசேயின் மூலமாக உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பத்தின் உருவத்தை நோக்கி பார்ப்பதினால் மாத்திரமே. அது மனித ஞானத்திற்கு பைத்தியமாகவும், ஏளனத்திற்குரியதாகவும் தோன்றலாம். அது அவர்களால் ஏற்றுகொள்ள முடியாததாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் மீட்கப்பட வேண்டுமானால் உயர்த்தப்பட்ட அந்த வெண்கல சர்ப்பத்தை நோக்கி பார்ப்பதைத்தவிர வேற எந்த வழியையும் தேவன் அவர்களுக்கு வைக்கவில்லை. அதை ஏற்றுக்கொண்டு நம்பி, விசுவாசத்தோடு நோக்கி பார்த்தவன் மட்டுமே உயிர்தப்பி பிழைத்தான். மற்ற திரளான ஜனங்கள் அனைவரும் தேவனால் அழிக்கபட்டார்கள்.

அப்படிபோலவே கடவுளின் நீதியான நித்திய தண்டனைக்கு ஏதுவான பாவியான மனிதன் தனது பாவ தண்டனையிலிருந்து மீட்கப்பட கடவுள் ஏற்படுத்திய ஒரே வழி சிலுவையில் உயர்த்தப்பட்ட ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பது மட்டுமே. ஏன் அந்த ஒரு வழியை மட்டும் கடவுள் ஏற்படுத்தினார் என்று நீங்கள் கேட்கலாம்.

ஏனென்றால் இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் மட்டுமே கடவுள் பாவத்தை எவ்வாறு நீதியாக தண்டித்தார் என்று எடுத்துகூறுகிறது. பாவிகளின் மீதான பரிசுத்த தேவனது உக்கிர கோபம் தீர்க்கபட தேவனே தனது பரிசுத்த குமாரானாகிய இயேசுகிறிஸ்துவை இந்த உலகத்தில் அனுப்பி, பாவமில்லாத அவரை பரிசுத்த பாவ பரிகாரபலியாக சிலுவையில் மரிக்க செய்தார். கடவுள் பாவத்தையும், பாவத்தினுடைய கொடூரத்தையும் ஒருபோதும் தண்டிக்காமல் விடார் என்பதையும் சிலுவையில் உயர்த்தப்பட்ட கிறிஸ்துவின் மரணம் நமக்கு தெரிவிக்கிறது.

இந்த உலகில் ஒன்று கடவுள் உங்கள் பாவத்தை கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் வைத்து தண்டிக்க வேண்டும் அல்லது உங்கள் பாவத்தை உங்கள் மேல் வைத்து நரகத்தில் தண்டிக்க வேண்டும். இவற்றில் எது உங்கள் வாழ்கையில் நிகழவேண்டுமென்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” ( 1தீமோ 1:15) என்றும் “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப். 4:12) என்றும் வேதம் தெளிவாகச் சொல்கிறது. பாவத்தின் மீதான தேவ தண்டனையிலிருந்து மீட்கப்பட, தேவ சமூகத்தில் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் மெய்யான ஜீவனுள்ள தேவனாகவும், பாவத்திலிருந்து விடுதலை தருகிற இரட்சகராகவும் விசுவாசிப்பதை தவிர வேறு எந்த வழியும் உங்களுக்கு இல்லை. உங்கள் பாவத்தை விட்டு மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவை விசுவாசியுங்கள். அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்.

ஒருவேளை நமது தேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலை இன்னும் ஓரிரு மாதங்களில் மாறிவிடலாம். நீங்கள் கொரோனாவிலிருந்து தப்பித்து உயிர் பிழைக்கலாம். ஆனால், பரிசுத்த தேவன் கொடுக்கும் பாவ தண்டனையிலிருந்து ஒருபோதும் நீங்கள் தப்பமுடியாது. நீங்கள் கொரோனா வியாதியுடன் மரித்தாலும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினால் பாவ மன்னிப்பாகிய இரட்சிப்பை பெற்று இருப்பீர்களேயானால், அழிந்துபோககூடிய தற்காலிகமான இந்த உலகத்தைவிட்டு கடந்து நித்தியகாலமாய் தேவனோடு வாழக்கூடிய உன்னதமான வாழ்வை பெறுவீர்கள். மாறாக நீங்கள் எல்லாவகையிலும் உங்களை கவனமாக பாதுகாத்துக்கொண்டு கொரோனாவிலிருந்து தப்பித்திருந்தாலும், இரட்சிக்கப்படாமல் இருப்பீர்களானால் நிச்சயம் நீங்கள் ஒருநாள் மரணத்திலிருந்தும் பாவத்தின் மீதான தேவனின் நியாயத்தீர்ப்பிலிருந்தும், அவரது ஆக்கினைத் தீர்ப்பிலிருந்தும் ஒருபோதும் தப்ப முடியாது. உங்களுக்கு தேவையானது கொரோனாவிலிருந்து விடுதலை அல்ல, பாவத்திலிருந்து விடுதலை. இன்றே உங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்பி உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஆண்டவராகவும், இரட்சகராகவும் விசுவாசியுங்கள்!!. தேவன்தாமே கிருபையாய் உங்களை இயேசுகிறிஸ்துவினிமித்தம் மன்னித்து, பாவம் என்னும் தீராத நோயிலிருந்து மீட்டு தமது மகிமையான நித்திய வாழ்வை தந்தருள்வாராக!!.
ஆமென்!

உலகமெங்கும் கொரோனா | ஒரு வேதாகம பார்வை (Download PDF)

கிறிஸ்துவின் பணியில்..
போதகர். மாற்கு
இவாஞ்ச்செலிக்கல் பாப்திஸ்து திருச்சபை
பைக்காரா, மதுரை – 4.
செல்: 8124900629