கொரோனாவும் - குஷ்டரோகமும் 1


வேதப்பகுதி : லூக்கா 5:12-14

லூக்கா 5:12 பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
லூக்கா 5:13 அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.
லூக்கா 5:14 அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார்.

உலகமுழுவதும் ஒரு இக்கட்டான நிலையை தேசங்கள் சந்தித்து வருகின்றன. ஒரே ஒரு வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளை கதிகலங்க வைத்துக் கொண்டிருகின்றது. மரண பயங்ககளும், திகில்களும் எல்லா மனிதர்களிடத்திலும் காணப்படுகின்றது. ஊரெல்லாம் ஒரே குரல்… தனித்திரு, விழித்திடு, விலகியிரு, 144 தடை, ஊரடங்கு உத்தரவு – இவையெல்லாம் எதற்காக? ஒரே ஒரு உயிர்கொல்லி நோயிலிருந்து மனிதன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான். ஒரு சரீர நோயிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள மனிதன் இத்தனை பிரயாசங்களைப்படுகிறான். ஆனால் நாள்தோறும் அவனை அழித்துக் கொண்டிருக்கின்ற ஆத்தும நோயைக்குறித்து சிந்திக்க மறுத்து உணர்வற்றிருக்கிறான். கொரோனாவை விட பலமடங்கு மனிதனுக்கு (உங்களுக்கு) ஆபத்தை கொண்டுவருகின்ற அந்த ஆத்தும நோயைப் பற்றி சிந்திக்கவும் அதிலிருந்து எப்படி மீட்கப்பட முடியும் என்கிற மிக அவசியமான செய்தியை மேற்கண்ட வேதபகுதியிலிருந்து சிந்திப்பதற்கு உங்களை அழைக்கிறேன்.

1. மிக ஆபத்தான ஆத்தும நோய்

லூக்கா 5:12 : குஷ்டரோகம் நிறைந்த மனிதன்
கடவுள் வேதத்தின் பல்வேறு பகுதிகளில் மற்ற எந்த நோயைக்காட்டிலும் இந்த குஷ்டரோகத்தை குறித்தும், குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட மனிதனை குறித்தும் மிக சிறப்பான கவனம் செலுத்தி பேசுகிறதை நாம் கவனிக்கலாம். பிரதானமாக லேவியராகமம் 13, 14 அதிகாரங்களில் இந்த நோயின் தன்மையை குறித்தும், அதின் விளைவுகளை குறித்தும் அதிலிருந்து மீட்கப்பட்டவன் செய்யகூடிய சரீர சுத்திகரிப்பைக் குறித்தும் நமதாண்டவர் விரிவாக பேசுகிறார். ஆரோனின் சகோதரி மிரியாமுடைய குஷ்டரோகத்தைக் குறித்தும், நாகமான், உசியா ராஜா ஆகியோரது குஷ்டரோகத்தைக் குறித்தும் வேதம் நமக்கு அநேக காரியங்களை கற்றுத்தருகிறது. இங்கு நாம் இந்த புதிய ஏற்பாட்டிலே பார்க்கிற இந்த குஷ்டரோகியின் நிலையையும் அவன் அதிலிருந்து மீட்கப்பட்ட விதத்தையும் அடிப்படையாக கொண்டு நாம் அறியவேண்டிய சில ஆவிக்குரிய சத்தியங்களை தற்கால பிரச்சனையோடு தொடர்பு படுத்தி பார்க்க இருக்கிறோம்.

முதலாவதாக நாம் கொரோனாவுக்கும் குஷ்டரோகதிற்கும் உள்ள ஒருசில ஒற்றுமைகளை பார்ப்போம். இன்று நம்மைப் பாதித்து கொண்டிருக்கின்ற இந்தக் கொரோனா நோயை போலவே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இருந்த குஷ்டரோகமும், அதினால் பாதிக்கப்பட்ட மனிதர்களும் இருந்தார்கள். கொரோனாவைப் போலவே குஷ்டரோகத்தை குணமாக்குவதற்கு எந்தவித மருந்தும் அக்காலத்தில்லை. கொரோனாவைப் போல குஷ்டரோகமும் ஒரு தொற்றுநோய். கொரோனா மெல்ல மெல்ல சரீரத்தை பாதித்து முற்றிலும் அழிப்பதுபோல குஷ்டரோகத்தால் பாதிக்கபட்ட மனிதனும் தீவிரமான மரணத்தை அடைகிறான். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்தைவிட்டு, எல்லோரையும் விட்டு தனிமையாக்கப்படுவதுபோல, குஷ்டரோகியும் பட்டணத்தைவிட்டு வனாந்தரத்திலே தனிமைப்படுத்தபட்டான். கொரோனா நோயுள்ள மனிதன் தொடுகிற சக மனிதன், இடம் மற்றும் பொருட்கள் எல்லாம் அந்த நோயினால் பாதிக்கப்படுகிறது, அதைப்போலவே குஷ்டரோகியும் தன்னை சுற்றியுள்ள, தான் தொடுகிற எல்லாவற்றையும் தீட்டுள்ளதாக்குகிறான்.

கொரோனாவையும் குஷ்டரோகத்தையும் ஒப்பிடும்போது இப்பொழுதுள்ள கொரோனாவைவிட இயேசுகிறிஸ்துவின் நாட்களில் வாழ்ந்த குஷ்டரோகியின் நிலை மிகவும் படுமோசமானது. கொரோனாவில் பாதிக்கபட்டவனுக்கு மருத்துவமனை உள்ளது, தற்காலிகமான சிகிச்சை பெறலாம். ஆனால் குஷ்டரோகி பாதுகாப்பற்ற வெளிகளில் கிடக்க வேண்டும். குஷ்டரோகி கையில் விலங்கு போடப்பட்டு அவன் தீட்டானவன் என்று கூறி எல்லா மனிதர்களிலிருந்தும் தனிமைப் படுத்தபடுவான். வனாந்திரத்திலிருந்து அவன் ஊருக்கு வந்தால் 39 கசையடிகள் கொடுக்கப்படும். அவன் தனது வாழ்நாள் முழுவதையும் விசாரிப்பார் ஒருவருமில்லாமல் தனிமையோடும், பாரமான துக்கத்தோடும் செலவு செய்திருக்கிறான். குஷ்டரோகியான மனிதனின் சரீரம் உணர்வுகளை இழந்து உணர்ச்சியற்று காணப்படும். அவன் சரீரத்தை வெட்டினாலும், தீக்கொளுத்தினாலும் அவன் உணர்ச்சியற்று காணப்படுவான். மொத்தத்தில் குஷ்டரோகியான ஒருவன் அக்காலத்தில் ஒரு நடைபிணமாகவே கருதபட்டான். ஒரு குஷ்டரோகி சுகமாகிறான் என்றால் மரித்தவன் உயிர்த்தெழுந்ததற்கு சமமாக எண்ணப்பட்டது.

இங்கு இயேசுகிறிஸ்துவிடம் வரும் குஷ்டரோகி அவன் வெறும் குஷ்டரோகி என்று கூறாமல் குஷ்டரோகம் நிறைந்தவன் என்று வேதம் கூறுவதைப் பார்க்கிறோம். அதாவது அவன் அந்த நோயினால் முழுவதும் பாதிக்கப்பட்டு மரண தருவாயில் (last stage) இருக்கிறான். எல்லாம் முற்றிப்போச்சு, இனி உன்னை மீட்பதற்கான எந்த வழியும் இல்லை. உன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்கிற நிலையில் இருக்கிறான். வேதத்தில் குஷ்டரோகம் என்பது பாவியின் மீதான கடவுளின் நேரடியான கோபத்தின் வெளிப்பாடாகும். பாவத்தின் தன்மையையும் கடவுளின் கோபத்தையும் மனிதன் சரியாக அறிவதற்காகவே கடவுள் குஷ்டரோகத்தை மனிதனின் வாழ்வில் அனுமதித்திருந்தார்.

ஒரு வகையில் சொல்லப்போனால் பாவத்திலிருக்கிற மற்றும் பாவம் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஆவிக்குரிய நிலையில் குஷ்டரோகிதான். பாவத்தில் வாழ்கிறவன் மெய்யான கடவுளை அறிய விரும்பான், கடவுளைப் பற்றிய காரியங்கள் அவனுக்கு விருப்பமில்லாதவைகளும், கடினமானவைகளுமாம். அவன் தனது பாவத்தின் வீரியத்தையும், அதின் விளைவுகளையும் ஒருபோதும் உணராதவன். குஷ்டரோகம் முழு சரீரத்தையும் கறைபடுத்தி அழிப்பதைபோல, பாவியான மனிதனும் தன்னை சுற்றியுள்ள எல்லாவற்றையும் கறைபடுத்தி வாழ்பவன். சக மனிதனையும் அழிவிற்கு ஏதுவாக நடத்துபவன். எல்லோரோடும் இணைந்திருந்தும் தனிமையாய் வாழ்பவன். உங்களது என்னுடைய உண்மையான உள்ளான நிலையும் இதுதான்.

உங்கள் இருதயத்தை கேட்டுப்பாருங்கள் உங்கள் சுபாவம் எப்படி இருக்கிறது. கடவுளைப் பற்றிய காரியங்களில் உங்கள் ஈடுபாடு எவ்வாறு உள்ளது? எவ்வளவு தூரம் அதை கடமையாக அல்லது ஒரு வேலையைப் போல செய்கிறீர்கள்? தேவ சமுகத்தில் எவ்வளவு நேரம் அல்லது எவ்வளவு மகிழ்ச்சியாய் ஜெபம் செய்கிறீர்கள்? கடவுளை அறிவதில் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள்? தேவனுக்குள்ளான ஆராதனையை எப்படிப்பட்ட மனமகிழ்ச்சியோடு ஆராதிக்கிறீர்கள்? கொரோனாவும், குஷ்டரோகமும் சொல்லக்கூடிய அடிப்படை விஷயம் ஒன்றுதான், அது உங்கள் ஆத்துமாவை அழித்துகொண்டிருக்கின்ற உங்கள் பாவம் என்னும் ஆவிக்குரிய நோயையைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் பாவம் கடவுளிடத்திலிருந்து எவ்வளவு தூரம் உங்களைப் பிரித்து வைத்திருக்கின்றது. உள்ளான ஆவிக்குரிய நிலையில் தேவனைவிட்டு நீங்கள் ரொம்ப தூரம் தனிமைப் படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருகிறீர்கள். பாவம் உங்கள் ஆத்துமாவை வஞ்சித்து உங்களை அழித்துக் கொண்டிருக்கிறதைக் குறித்து நீங்கள் அக்கறையற்று காணப்படுகிறீர்கள்.

பாவம்தான் உங்களுடைய வாழ்வினுடையை சந்தோஷத்தையும், நிம்மதியையும் ஒன்னுமில்லாமல் ஆக்கிகொண்டிருகின்றது என்பதை அறியீர்களா? கடவுளுடைய கோபமும், அவரின் நீதியான தண்டனையும் உங்கள் மேல் இருக்கும்வரை உங்கள் வாழ்க்கையில் கண்ணீரும் துயரமும் ஒருபோதும் நீங்காது. மன உளைச்சலும், சஞ்சலமும் உங்கள் இருதயத்தை விட்டு ஒருபோதும் போகாது. உங்கள் வேலை ஸ்தலத்திலும், உங்கள் குடும்பத்திலும், உங்கள் திருச்சபை வாழ்விலும் கர்த்தருடைய நீதியின் கரத்தை மாத்திரமே பார்ப்பாய். பாவத்தில் தொடர்ச்சியாக நீங்கள் வாழும்போது உணர்ச்சியற்று சடுதியான அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறாய் என்பதை மறவாதீர்கள். பாவம் உங்கள் ஆத்துமாவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, நீதியான தேவனுடைய தண்டனைக்கு வழி நடத்தி நித்திய நரகத்திற்கு உங்களைக் கொண்டுபோய்விடும் என்பதைக்குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். அங்கேயிருந்து உங்களை மீட்பதற்கும், நீங்கள் தப்பிப்பதிற்கும் எந்த வழியும் இல்லை என்பதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

2. ஆத்துமநோய் தீர்க்கப்படுவதற்கான வழிமுறை

லூக்கா 5:12 : அவன் இயேசுவைக்கண்டு, முகங்குப்புற விழுந்து ஆண்டவரே, உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்

இப்படி பாவத்தின் பிடியிலும் மரணத்தின் பிடியிலும் கடவுளுடைய கோபத்தை சுமந்து வாழ்கிற இந்தக் குஷ்டரோகி இயேசுகிறிஸ்துவை குறித்து கேள்விப்பட்டு அவரிடத்தில் வருகிறான். இங்கு தேவனே தமது கிருபையினால் தம்முடைய வல்லமையான சுவிசேஷ செய்தியை அனுப்பி மரணத்திற்கு ஏதுவான பாவியை தன்னிடம் அழைக்கிறார். அவரின் தெய்வீக அதிகாரமுடைய போதனைகள், பரலோக ராஜ்ஜியத்தை குறித்த உபதேசங்கள், நித்திய வாழ்வைக் குறித்த ஜீவனுள்ள வார்த்தைகள், தெய்வீக வல்லமை நிறைந்த அவரின் அற்புதங்கள் ஆகிய எல்லாவற்றையுங் குறித்தும் கேள்விப்பட்டு இந்த மனிதன் கிறிஸ்துவினிடத்தில் வருகிறான். பாவத்தில் மரித்திருகிற மனிதன் தனது மீட்பிற்காக தானாக கடவுளிடத்தில் வர முடியாது, கடவுளே மனிதனிடத்தில் தனது மீட்பின் செயலைத் துவக்குகிறார்.

இயேசுகிறிஸ்துவை குறித்து கேள்விபட்டு, இந்தக் குஷ்டரோகி அவரிடத்தில் வந்தபோது முதலில் என்னை சுகமாக்கும் என்று கேட்கவில்லை, என் நிலைமையைப் பாரும் என்று கூறவில்லை, தனது பிரச்சனையை முன்னிறுத்தவில்லை. மாறாக முதலாவது அவரின் தெய்வீக தன்மையையும், அவரின் அதிகாரத்தையும் விசுவாசிக்கிறான். முகங்குப்புற விழுந்து, ஆண்டவரே – என்று சொல்லும்போது இயேசுகிறிஸ்து கனத்திற்குரியவர், மேலானவர், அதிகாரம் கொண்டவர் என்பதை அறிக்கையிடுகிறான், மாற்கு சுவிசேஷத்தில், அவன் முழங்கால்படியிட்டு – என்று சொல்லபட்டிருக்கிறது அவன் அவரை வல்லமை படைத்தவர், ஆளுகிறவர், போற்றுதலுக்குரியவர் என்றும், மத்தேயு சுவிசேஷத்தில் அவரைப் பணிந்து, ஆண்டவரே – என்று கூறும்போது இயேசுகிறிஸ்து ஆராதனைக்குரியவர், தெய்வீக தன்மைக் கொண்டவர் என்றும் அறிந்து அவர்மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்துகிறான். பாவத்தில் இருக்கிற ஒவ்வொரு மனிதனும் முதலாவது கடவுள் யார் என்றும் அவர் எப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர் என்பதை அறிந்து அவரிடத்தில் வருவதே முக்கியம். அவன் தனது சுய தேவைகளை முக்கியப்படுத்தாமல் தேவ சமுகத்தில் தன்னை தாழ்த்துவதே அவசியம்.

“உமக்கு சித்தமானால்” – இங்கே இந்தக் குஷ்டரோகி இயேசுகிறிஸ்து தன்னை சுகமாக்க வேண்டுமென்று அவரை வற்புறுத்தவில்லை, அவருக்கு கட்டளையிடவில்லை, “அவரிடம் நீர் இதைச் செய்வீரானால்” என்று பேரம்பேசவில்லை. உமக்கு சித்தமானால் என்று கூறும்போது தான் அவரிடம் சுகம் பெறுவதற்கு தகுதியற்றவன் என்று அறிகையிடுகிறான். தான் சுகமாக்க படவேண்டுமானால் முதலாவது அவரது இரக்கமும், தயவும் தனக்கு தேவை என்பதை அறிக்கையிடுகிறான். தேவனது கோபத்தையும் சாபத்தையும் சுமந்து கொண்டிருக்கிற தனக்கு நீதியான மரணமும், தண்டனையும் கிடைப்பதே சரியானது என்று உணர்ந்து முதலாவது தனக்கு கடவுளது பாவ மன்னிப்பும் கிருபையும் அவசியம் தேவை என்பதை தெரிவிக்கிறான். அவரது விருப்பதிற்கும் அவரின் சர்வ ஏகாதிபத்திய சித்தத்திற்கும் தன்னை ஒப்புக்கொடுக்கிறான். தனது இயலாமையையும், பாவ நிலையையும் அறிக்கையிடுகிறான். பாவத்தில் வாழ்கிற ஒவ்வொரு மனிதனும் மீட்பை பெறுவதற்கு கிறிஸ்துவின் சமூகத்தில் இப்படிப்பட்ட இருதயத்தோடு வரவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.

அவன் தனது தற்கால தேவையை முக்கியபடுத்தியோ, சரீர வியாதியின் விடுதலைக்காகவோ, இந்த உலகபிரகாரமான ஆசீர்வாதங்களை பிரதானமாக வைத்தோ வரக்கூடாது. முதலில் அவரின் தெய்வீக அதிகாரத்தையும், சர்வ ஏகாதிபத்திய ஆளுகையும் புரிந்து அவரிடத்தில் தன்னை முற்றிலும் தாழ்த்தி அவருடைய இரக்கத்திற்காகவும், அவரின் கிருபைக்காகவும் கெஞ்சி வரவேண்டும். அவரிடத்தில் பாவ மன்னிப்பையும், ஆத்மீக விடுதலையை பெறுவதுமே அவனது அதிமுக்கிய தேவை. மனிதன் ஏதோ பெயரளவுக்கு தன்னைப் பாவியென்று ஒத்துக்கொள்வதாலோ அல்லது ஆண்டவரே என் பாவத்தை மன்னியும் என்று கேட்பதினாலோ பாவ மன்னிப்பும், இரட்சிப்பும் ஒருபோதும் ஒரு மனிதனிடத்தில் நடைபெற்று விடாது. முதலாவது அவனது உள்ளான இருதயத்தில் கடவுளைக்குறித்த ஆழமான புரிதலும், பாவத்தைப்பற்றிய மெய்யான துக்கமும் தேவனின் மன்னிப்பை பெறுவதற்கான தனது தகுதியற்ற நிலையையும் இருதய சுத்தத்தோடு உணராதவரை ஒரு பாவியினுடைய வாழ்வில் ஆத்மீக மீட்பும் பாவத்திலிருந்து விடுதலையும் சாத்தியமில்லை.

நீங்கள் இயேசுகிறிஸ்துவினால் உங்கள் பாவத்திலிருந்து மீட்கப்பட வாஞ்சிப்பீர்களானால் எப்படிப்பட்ட இருதயத்தோடு அவரிடத்தில் வருகிறீர்கள்? மெய்யாகவே கிறிஸ்து தருகிற பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும் விரும்புவீர்களானால், அவர் தருகிற ஆவிக்குரிய நித்திய மகிழ்ச்சியையும், வாழ்வையும் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சர்வ அதிகாரமுள்ள தேவனுக்கு முன்பாக நீங்கள் உங்கள் ஆத்துமாவை தாழ்த்தி நொறுங்குண்ட இருதயத்தோடு அவருடைய இரக்கத்திற்காக அவரிடம் கெஞ்சி நில்லுங்கள். அவர் உங்கள் பாவத்தை மன்னிக்கவும், தேவ கோபத்திலிருந்து உங்களை விடுவிக்கவும் நொறுங்குண்ட இருதயத்தோடு அவரிடம் மன்றாடுங்கள்.

3. ஆத்துமநோய் தீர்க்கும் ஒரே இரட்சகர் – இயேசு

லூக்கா 5:13 : அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு, எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு என்றார், குஷ்டரோகம் நீங்கிற்று.

மரணத்திற்கேதுவான பாவியான மனிதன் பரிசுத்த தேவனது அதிகாரத்தையும், அவரின் வல்லமையையும் உணர்ந்து, அவருக்கு முன்பாக தன்னை தாழ்த்தி அவரிடம் பாவ மன்னிப்பிற்கும் இரக்கதிற்கும் கெஞ்சி வரும்போது அவர் அவனிடத்தில் செயல்படுகிறவராயிருக்கிறார். எப்படி செயல்படுகிறார்?

அவர் தமது கையை நீட்டி – என்று கூறபடுகிறது, மாற்கு சுவிசேஷத்தில் பார்க்கும்போது அவர் மனதுருகி தமது கையை நீட்டி என்று கூறுகிறார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தன்னிடம் விசுவாசத்தோடு வந்த பாவியிடம் முதலாவது மனதுருகுகிறவராயிருக்கிறார். அதாவது அவனது உள்ளான ஆத்தும வலிகளையும், பாவத்தின் நிமித்தம் அவன் சந்தித்து இருகின்ற விளைவுகளை பார்த்து துக்கமடைகிறார். பாவத்தின் நிமித்தம் சரீரத்தில் அவன் அடைந்திருக்கின்ற வேதனைகளையும், அவன் சஞ்சலத்தையும் தன் இருதயத்தில் உணர்கிறார். உங்களது பிரச்சனையும், வலிகளும் எப்பேர்பட்டதாக இருந்தாலும் இயேசுகிறிஸ்து ஒருவரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அவர் தமது ஒரு வார்த்தையினால் அவனை சுகப்படுத்தியிருக்க முடியும் அல்லது தமது இருதயத்தில் அவர் நினைத்திருந்தாலே அவன் சுகமாகி போயிருப்பான். ஆனால் இங்கு இயேசுகிறிஸ்து மனித சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அவனிடத்தில் இடைப்படுகிறார். அவர் தமது கையை நீட்டி அவனை தொட்டார் – என்று பார்க்கிறோம். பாவியின் மீதான கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு மேன்மையானது என்பதை இது விளக்குகிறது. இதுவரை அவன் அருகில் எந்தவொரு மனிதனும் நின்றிருக்கமாட்டார்கள், அவனிடத்தில் பேசியிருக்க மாட்டார்கள். அவனை தொடுவது என்பது அவனுடைய அசுத்தத்தில் பங்கெடுப்பதாகும்.

அவனைத் தொடுவது என்பது அவன் மீதான தேவனுடைய கோபத்திலும், சாபத்திலும் தன்னை இணைத்துக் கொள்வதாகும். யார் அவனைத் தொட முன் வருவார்கள்? கொரோனா நோய் தோற்றியுள்ள நபரை தொடுவதற்கும் அவரோடு இணைந்து இருப்பதற்கும் நீங்கள் முன் வருவீர்களா? இங்கே கிறிஸ்து அதைத்தான் செய்கிறார். இங்கே குஷ்டரோகிக்கு அவன் சரீரத்திலிருந்து விடுதலை தருவதற்கு முன்பாக அவன் எதிர்பார்த்து வந்த ஆத்தும விடுதலையை அவனுக்குத் தருகிறார். இயேசுகிறிஸ்து அவனுக்கும் அவரைச்சுற்றியுள்ள எல்லா மனிதர்களுக்கும் ஒரு மிக முக்கியமான ஆவிக்குரிய சத்தியத்தை தெளிவு படுத்துகிறார். அவனைத் தொடுவதின் மூலம் பாவத்தின் மீதான தனது அதிகாரத்தையும், பாவியின் மீதான தேவனது கோபத்தையும், சாபத்தையும் தான் எவ்வாறு அகற்றிப்போட வல்லமை படைத்தவர் என்பதை நிரூபிக்கிறார். தான் ஒருவர் மாத்திரமே அவனை பாவத்திலிருந்தும் தேவனுடைய நித்திய தண்டனையான நரகாக்கினையிலிருந்தும் காப்பாற்றக்கூடியவர் என்று பறைசாற்றுகிறார்.

இதை வெறும் உள்ளான செய்தியாக மாத்திரம் சொல்லாமல் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பாவியினுடைய பாவத்தை போக்குவதற்கு பரலோகத்தினுடைய தனது உன்னத மகிமையை விட்டிறங்கி பாவ மாம்ச சாயலை ஏற்று, பாவிகளோடு வாசம்பண்ணி, பாவிகளை மீட்பதற்கு கடவுள் நியமித்த எல்லா நிபந்தனைகளுக்கும் தன்னை உட்படுத்தி, தேவனது நியாயப்பிரமாணத்தில் ஒன்றையும் தவறாமல் கடைபிடித்து, தனது சொந்த ஜீவனையே பாவ பரிகார பலியாக சுட்டெரிக்க கொடுத்து, பரிசுத்த தேவனது கோபம் முழுவதையும் சுமந்து சிலுவையின் மரணத்திற்கே தன்னை ஒப்புக்கொடுத்தார். மனிதனுக்கு பாவத்திலிருந்து விடுதலை கொடுக்க பரிசுத்த தேவ குமாரனே தன்னை பாடுகளுக்கு ஒப்புக்கொடுத்து தனது ஜீவனையே பலியாக அர்ப்பணித்திருப்பாரானால் பாவம் எவ்வளவு ஆபத்தானது என்று உணர்ந்துகொள்ளுங்கள். நமக்கு பாவ மன்னிப்பு என்பது சும்மா வந்துவிடவில்லை, அது பரிசுத்த தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் ஜீவனையே விலைக்கிரயமாக கேட்டது.

எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு என்றார், உடனே குஷ்டரோகம் நீங்கிற்று
இந்த ஆவிக்குரிய பாவ மீட்பை அந்த குஷ்டரோகி சரியாய் உணரும்போது, அதற்கு அவன் கீழ்ப்படியும்போது கிறிஸ்து அவனது வாழ்க்கையின் ஆண்டவராக, இரட்சகராக வரும்போது அவர் அவனது எல்லா தேவைகளையும் சந்திக்க போதுமானவராக இருக்கிறார். அவர் இங்கு எனக்கு சித்தமுண்டு என்கிறார் – எப்போது பாவி மெய்யாய் தனது பாவத்தை விட்டு மனந்திரும்பி தன்னைத் தாழ்த்தி வரும்பொழுது அவனை மீட்பதற்கும், பாதுகாப்பதற்கும் இயேசுகிறிஸ்து எப்பொழுதும் ஆயத்தமுள்ளவராகவே இருக்கிறார். தன்னை தேடுகிற எவனும் கண்டடைகிறான் என்கிறார். சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்கிறார், துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமில்லை என்கிறார். எல்லாரும் இரட்சிக்கப்பட அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

சித்தமுண்டு சுத்தமாகு என்று கூறிய உடனே அவன் குஷ்டரோகம் நீங்கி முழுமையாக சுத்தமாக்கபட்டான் என்று பார்க்கிறோம். மரண தருவாயிலும், மீட்பதற்கான எந்தவித சாத்தியக்கூறும் இல்லாத சூழ்நிலையிலும், எல்லாவித நம்பிக்கையும் அற்றுப்போன நிலையிலும் பாவியான இந்தக் குஷ்டரோகி கிறிஸ்துவினிடத்தில் வரும்போது அசாத்தியமான புதிய வாழ்வை பெறுகிறான். மரித்தவன் என்று எண்ணபட்டவன் ஜீவனுள்ளவனாய் திரும்பி செல்கிறான். உலகம் தருகிற தற்கால விடுதலையல்ல, இயேசுகிறிஸ்துவோடு என்றென்றுமாய் இருக்ககூடிய நித்திய வாழ்வை அவரின் கிருபையினாலும், பாவ மன்னிப்பினாலும் இந்த மனிதன் பெற்று செல்கிறான். என்ன ஒரு உன்னத சிலாக்கியம். எவ்வளவு பெரிய மகிமையான வாழ்வு.

இதுதான் ஒவ்வொரு பாவியான மனிதனுக்கும் அடிப்படைத்தேவை. ஒருவேளை இன்றைக்கு இந்த கொரோனாவிலிருந்து நீங்கள் மீட்கப்பட்டாலும், இல்லையென்றாலும் நிச்சயம் ஒருநாள் உங்களுக்கு மரணம் என்பது உண்டு. அதை நீங்கள் சந்திக்காமல் ஒருபொழுதும் இந்த உலகத்தைவிட்டு கடந்து போக முடியாது. உங்கள் ஆத்துமாவை அழித்துக்கொண்டிருக்கும் பாவ நோயோடு நீங்கள் மரிப்பீர்களானால் நிச்சயமாகவே பரிசுத்த தேவனின் கோபத்தினால் நித்திய நரகாக்கினையை பெறுவீர்களென்று என்று உணர்ந்து, உங்கள் பாவத்தை விட்டு மனந்திரும்புங்கள். சர்வவல்லமை படைத்த கடவுளுக்கு முன்பாக நீங்கள் குற்றவாளிகள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மறவாதிருங்கள்.

கடவுள் தமது மகாபெரிய கிருபையினாலே பாவிகளை பாவத்திலிருந்தும் தேவ தண்டனையிலிருந்தும் மீட்பதற்காக தனது சொந்தகுமரனாகிய இயேசுகிறிஸ்துவையே பாவ பரிகார பலியாக கல்வாரி சிலுவையில் மரிக்கச் செய்து, பாவிகளுக்கான நித்திய வாழ்வை ஏற்படுத்தியிருக்கிறார். இன்றைக்கு நீங்கள் இந்தக் குஷ்டரோகியைபோல மெய்யாகவே உங்கள் பாவத்தை விட்டு மனந்திரும்பி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் உங்களை தாழ்த்தி அவரிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அவரிடம் பாவமன்னிப்பையும் அதிலிருந்து மீட்பையும் கேட்பீர்களானால் இன்றைக்கே உங்கள் பாவங்களை மன்னித்து உங்களை இரட்சிக்க அவர் சித்தமுள்ளவாராயிருக்கிறார். மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவையும் அவரது சிலுவை மரணத்தையும் விசுவாசியுங்கள். தேவன் தாமே உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வாராக!
ஆமென்!

கொரோனாவும் – குஷ்டரோகமும் (Download PDF )கிறிஸ்துவின் பணியில்..
போதகர். மாற்கு
இவாஞ்ச்செலிக்கல் பாப்திஸ்து திருச்சபை
பைக்காரா, மதுரை – 4.
செல்: 8124900629