கிருபை சத்திய தின தியானம்

மார்ச்:   25                        பொல்லாங்கனை ஜெயித்தல்          1யோவான்  2:1-14

வாலிபரே நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவ வசனம் உங்களில்

நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை

ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதுகிறேன். (1 யோவான்  2 :14)

       இந்த வசனம் சரீரப்பிரகாரமான வாலிபர்களுக்கு மாத்திரமல்ல, ஆவிக்குரிய வாலிபர்களுக்கும் எழுதப்பட்டிருக்கிறது. ஒருவேளை நீங்கள் சரீரத்தில் வயதானவர்களாக இருக்கலாம், ஆனால் ஆவியில் வாலிபர்களாக இருக்கமுடியும். இந்த வசனத்தில் சொல்லப்படும் வாலிபர்கள் பெலவான்களாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் எப்படி பெலவான்களாக இருக்கமுடிகிறது என்பதையும், அவ்விதம் இருப்பதினால் என்ன செய்யமுடிகிறது என்பதையும் பார்க்கிறோம்.

   தேவவசனம் அவர்களில் நிலைத்திருக்கிறது. ‘இன்று நான் உனக்கு கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது’ (உபா.,6 : 6 ) நாம் வெறுமையாக தேவனுடைய வார்த்தையை வாசிப்பது போதாது, அறிந்திருப்பதும் போதாது. அது இருதயத்தில் பதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்படவேண்டும். தேவனுடைய வார்த்தையை சிந்தித்து, தியானித்து இருதயத்தில் பத்திரப்படுத்த வேண்டும். மேலும் தாவீது ‘நான் உமக்கு விரோதமாக பாவம்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.’ (சங்  119 : 11) என்று சொல்லுகிறார். பவுலும் கூட ‘கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சக ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக’ (கொலோ., 3 : 16) என்கிறார்.

      மேலும் இந்த வாலிபர்களைக் குறித்து ‘பொல்லாங்கனை ஜெயித்ததினால். ‘என்று சொல்லப்படுகிறது. பொல்லாங்கனை ஒருபோதும் உன்னுடைய சொந்த பெலத்தால் ஜெயிக்கமுடியாது. அவன் தந்திரசாலி, புத்திசாலி, பலசாலி, அவனை அற்பமாய் எண்ணிவிடாதே. நீ அப்படி எண்ணினால் அவனிடத்தில் தோற்றுபோவாய். மத்தேயு 4ம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசு எப்படி அவனை ஜெயித்தார் என்று பார்க்கிறோம். தேவகுமாரனே கர்த்தருடைய ஜீவ வசனத்தைக் கொண்டுதான் ஜெயித்தார். நீயும் நானும் எம்மாத்திரம். அன்பானவர்களே! தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்கட்டும். அப்பொழுது நீங்கள் பெலவான்களாய், ஜெயிக்கிறவர்களாய் இருப்பீர்கள்.