கிருபை சத்திய தினதியானம் 

ஆகஸ்ட் 25             கர்த்தருக்கு ஒப்புக்கொடு          ஆதி 18:1-19

“கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” (ஆதி 18:14)

      தேவன் சர்வ ஏகாதிபத்தியத்தின் தேவன். ஆகவேதான் ஆபிரகாமுக்கு நூறு வயதானாலும் சாராளுக்கு தொண்ணூற்றாறு வயதானாலும், தேவனால் அவர்களுக்கு குழந்தையை கொடுக்க முடியும் என்பதை நாம் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் ஒரு செயலைத் திட்டமிட்டிருபாரனால், அவர் அதை நிறைவேற்றாமல் விடுகிறவர் அல்ல. ஆனால் அதனை நிறைவேற்ற ஒரு காலத்தை குறித்திருக்கிறார் என்பதை நாம் மறக்கக்கூடாது. “மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்று இயேசு சொல்லுகிறார்.

      நாம் எப்பொழுதும் தேவனை வேதம் சொல்லும் தேவனாக நோக்கிப்பார்க்க வேண்டும். அநேக சமயங்களில் தேவனை நாம் மனிதனைப் போல எண்ணிவிடுகிறோம். நம்முடைய அறிவு, ஞானம் எல்லாம் குறைவுள்ளது என்பதை மறவாதே. நம்முடைய ஞானம் தேவனுடைய உன்னதமான காரியங்களை காணக்கூடாத படிக்கு நம் கண்களை குருடாக்கிக் போடும். அதாவது அவிசுவாசக் குழியில் தள்ளிப்போடும். நாம் எப்பொழுதும் தேவனுடைய ஞானத்தை சார்ந்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் எது நல்லதோ, எது சிறந்ததோ அதை தேவன் நிறைவேற்றாமல் விடமாட்டார். அது நடப்பதற்கு எவ்வித சாத்தியக் கூறும் இல்லாமல் காணப்பட்டாலும், நிச்சயமாக அவர் திட்டத்தை நிறைவேற்றுவதில் தவற மாட்டார்.

    இன்னுமாக “தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை” (லூக் 1:37) என்று கர்த்தருடைய தூதன் கூறுவதைப் பார்க்கிறோம். ஆகவே நாம் தேவனுடைய திட்டத்திற்கு ஒப்புக்கொடுத்து ‘தேவனே உம்முடைய சித்தபடி என் வாழ்க்கையை நடப்பியும்’ என்று மன்றாடுவோமாக. அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கும் பொழுது, தேவன் பெரிய காரியங்களை நாம் காணும்படியாக செய்வார் என்பதை கண்டுணர்வோம். கர்த்தருக்கேற்ற வாழ்க்கையை வாழ நாம் கற்றுக் கொள்ளுவோமாக. அதில் மெய்யான சந்தோஷமும், சமாதானம் உண்டு என்பதை நினைவில் கொள்.