டிசம்பர் 11      

“ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்”(மத்தேயு 21:3).

      ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எருசலேமில் பவனி வரும்படியாக தான் தெரிந்து கொண்ட கழுதையை குறித்து இவ்விதமாக கட்டளைக் கொடுத்தார். நம்முடைய வாழ்க்கையின் சம்பவங்கள் எல்லாவற்றிற்காகவும் அவர் சகலத்தையும் நேர்த்தியாய் கட்டளையிடுகிறவரும் நடத்துகிறவரும் செயல்படுத்துகிறவருமாய் இருக்கிறார். உனக்கென்று கர்த்தர் ஏதாகிலும் வாக்கு பண்ணினால், அதை நம்பி நீ தைரியமாக போகலாம்.

      எலியாவை பஞ்சத்தின் நாட்களில் சாறிபாத் ஊருக்கு அனுப்பும் படியாக சொன்ன வேளையில், தேவன் இவ்விதமாக  “நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்”(1இராஜா 17:19) சொன்னார்.  ஒரு விதைவைக்கு தேவன் தீர்க்கதரிசியான எலியாவை பராமரிக்கும் படியாக கட்டளையிட்டார். உன்னுடைய வாழ்க்கையில் தேவன் ஒவ்வொரு காரியத்திலும் கட்டளையிடுகிறார் என்று நம்பி போகலாம்.

      எருசலேமில் தேவனுடைய ஆலயத்தை மறுபடியுமாக கட்டும்படி பாபிலோனில் இருந்த மக்களின் மனதில் கர்த்தர் எழுப்பினதையும் எஸ்றா 1:5 வது வசனத்தில் வாசிக்கிறோம். “அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்”(எஸ்றா 1:5). அருமையானவர்களே உனக்காக யாவற்றையும் செய்து முடிக்கிற தேவன் என்பதை உன் இருதயத்தில் பதித்துக் கொள்.