கிருபை சத்திய தின தியானம்

மார்ச் 11                        ஒத்தாசை வரும் பருவதம்           ஏசாயா 51:1–23

     ‘நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்;’ (ஏசாயா 51:12).

     இந்த உலகம் நமக்கு ஆறுதலைக் கொடுப்பதாகக் காணப்பட்டாலும், அது ஆறுதலல்ல. அந்த ஆறுதல் நமக்கு தற்காலிகமாக மனிதில் ஏற்படுகின்ற மாற்றமேயல்லாமல் மெய்யான ஆறுதலல்ல. ஆனால் கர்த்தர் கொடுக்கும் ஆறுதல் என்பது நிலைவரமானதும், மெய்யானதும், சாமதானத்தைக் கொடுக்கக்கூடியதுமாக இருக்கிறது. நம் வாழ்க்கையின் பிரச்சனைக்கு மூலக்காரணமாக இருக்கின்ற காரியத்தை அறிந்து, அதிலிருந்து நம்மை விடுவிக்கிற வழியை அறிந்தவராக நமக்கு ஆறுதலைக் கொடுக்கிறார். 

  தேவன்  நம்மை ஆறுதல்படுத்துகிறவராக இருக்கிறார்? ‘ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்’ (ஏசாயா 66:13)  என்று கர்த்தர் சொல்லுகிறார். ஒரு மனிதனின் அனுதின வாழ்க்கையில் ஒரு தாயைப் போல யார் தேற்றக்கூடும்? ஒரு தாய் தன் பிள்ளையை தேற்றும்பொழுது அதில் ஆழமான அன்பும், பாசமும், நேசமும் வெளிப்படுகின்ற உணர்வோடு கூடிய ஒன்றாக அது இருக்கிறது. கர்த்தரும் கூட தம்முடைய பிள்ளைகளின் பாடுகள், உபவத்திரவங்கள் மத்தியில் அவர் ஒரு தாயைக் காட்டிலும் மேலானவராக ஆறுதல்படுத்துகிறவராக இருக்கிறார். அவருடைய ஆறுதலானது நம் ஆத்துமாவிற்கு மிகவும் பிரயோஜனமான ஒன்றாக இருக்கும். 

மேலும், ‘கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீத சத்தமும் அதில் உண்டாயிருக்கும்’ (ஏசாயா 51:3)  என்று கர்த்தர் சொல்லுகிறார். ஒருவேளை உன் வாழ்க்கையானது பாழான ஸ்தலத்தைப் போலக் காணப்படலாம். மேலும் அது வனாந்தரமாக, கரடுமுரடான நிலமாகக் காணப்படலாம், ஆனால் தேவன் அதை கர்த்தருடைய தோட்டத்தைப் போல மாற்றுவார் என்பதை நம்பு.