மே 16            

“சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்” (சங்கீதம் 53:6).

நம்முடைய வாழ்க்கையில் மெய்யான விடுதலை, நம் இக்கட்டான சூழ்நிலையில் வருவதாக இருக்கிறது. அது சீயோனிலிருந்து அதாவது தேவனிடத்திலிருந்து நமக்கு வருகிறது. நாம் பரத்தையை நோக்கிப்பார்க்காமல், நம்முடைய இக்கட்டான வேலைகளில் மற்ற மனிதர்களை நம்புகிறோம். ஆனால் தேவனிடத்திலிருந்து நமக்கு ஒத்தாசை வருவதே உண்மையானது. இங்கு சீயோனிலிருந்து நமக்கு இரட்சிப்பு வருவதாக என்ற ஆசீர்வாதமான வார்த்தையை நாம் பார்க்கும்பொழுது, நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நம்பிக்கை உண்டு என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மேலும் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது என்று சொல்வது, ஆண்டவர் நம்முடைய சிறையிருப்பைத்  திருப்புவார் என்பதை உறுதிப்படுத்தும் வசனமாக இருக்கிறது.

வாழ்க்கையில் நாம் பாடுகளோடு கூட வாழ்ந்து, வாழ்க்கையில்  தடுமாறுகிறோம். தேவனுக்குப்  பிரியமான வாழ்க்கையில், பாடுகள் இருந்தாலும் அது நம்முடைய ஆத்துமாவுக்கு நன்மைக்காகவே ஆண்டவர் அதை அனுமதிக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அநேக வேளைகளில் நாம் உபத்திரவங்கள், பாடுகளை சந்திக்கும் பொழுது, நம் எதிர்மறையான தன்மையையே நம்மில் பார்க்கிறோம். நம்மை நாமே நொந்து கொள்ளுகிறோம். நமக்கு இதிலிருந்து மீட்பு இல்லை என்றெண்ணி, வேதனையையும் வருத்தத்தையும் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் தம் பிள்ளைகளின் சிறையிருப்பை திருப்புவார் என்பதே இந்த வசனத்தில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற நம்பிக்கை. அப்பொழுது களிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவர் சிறையிருப்பைத்  திருப்புவது  மட்டுமல்ல, வாழ்க்கையில் சூழ்நிலைகளை மாற்றி, நம்முடைய மனதில் மனமகிழ்ச்சியைக்  கொடுக்கிறார். ஆகவே எந்தவொரு சூழ்நிலையிலும் நம் விசுவாசமும் நம்பிக்கையும் குறைந்து போக வேண்டிய அவசியமில்லை.