செப்டம்பர் 16
கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? (ரோமர் 8:36)
ஒவ்வொரு மெய்கிறிஸ்தவனும் இவ்விதம் சொல்லுகிறவனாகவே இருப்பான், இருக்கவேண்டும். பாவியான தன்னை இரட்சித்த தேவனை நேசிப்பதே அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த உலகத்தில் அநேகருக்கு கொடுக்கப்படாத இந்த இரட்சிப்பை தனக்கு அருளின தேவனில் அவன் அன்பு கூராமல் எப்படி இருக்கமுடியும்? அவனை மீட்கும்படி அவர் பட்ட பாடுகள், அடைந்த நிந்தைகள், அவமானங்கள், அவன் உள்ளத்தை உருக்கவே செய்யும். ஆனால் அவன் இப்போது செல்லுவது இடுக்கமான பாதை. மனிதர்கள் இந்த இடுக்கமான பாதையை விரும்புவதில்லை. அவன் சுமந்து செல்லவேண்டிய சிலுவை இப்போது உண்டு. ஆனால் இவைகள் மத்தியில் பவுலைப்போல அவனும் ‘கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? என்று சொல்லக் கூடியவனாக இருக்கிறான். இன்றைக்கு மிகச்சிறிய சோதனை என்றாலும் தேவனை விட்டு ஓடுகிற அநேகக் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.
பவுல் இந்த அன்பைச் சோதிக்க அவருக்கு வந்த சோதனைகளை இங்கு குறிப்பிடுகிறார். ‘உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ என்று சொல்லுகிறார். இவைகள் மாத்திரமல்ல இதுபோன்ற இன்னும் எண்ணிலடங்கா சோதனைகள் ஏற்படலாம். மேலும் பவுல் என்ன சொல்லுகிறார்?’ இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.’ இவைகளில் சோர்ந்து கிறிஸ்துவை விட்டு விலகிப்போகவல்ல, இவைகளின் மத்தியிலும் தேவன் கொடுக்கும் பெலத்தால் ஜெயம்கொள்ளுவோம். என்றல்ல, ஜெயங்கொள்ளுகிறோம் என்று எழுதுகிறார். மேலும் ‘மரணமானாலும், ஜீவனானலும், தேவதூதர்களானலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயத்திருக்கிறேன். (ரோமர். 8:38-39).