நவம்பர் 23            

      “ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (பிலி 2:3)

      இன்றைக்கு மனிதர்கள் செய்யக்கூடிய காரியங்களை ஆராய்ந்துப் பார்த்தால் அதில் கலகமும், வீண் பெருமையும் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையில் இவ்விரண்டு காரியங்களும் காணப்படாது. கிறிஸ்தவ வாழ்க்கையில் அடித்தளம் எதுவென்று பார்த்தால் மனத்தாழ்மையே. இந்த வசனத்தில் பவுல் “ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள” என்று சொல்லுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் ஒருவரையும் குறைவுள்ளவர்களாக எண்ணக்கூடாது. நாம் எப்பொழுதும் பிறரை நம்மிலும் மேன்மையுள்ளவர்காக கருதி அவர்களிடத்தில் அன்பு செலுத்துவது நம் கடமையாகும். மேலும் பவுல், “வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்” (கலா 5:26) என்று சொல்லுகிறார். ஒரு கிறிஸ்தவனில் ஒருபோதும் இவ்வித குணங்கள் காணப்படக் கூடாது. இது நமக்கு(கிறிஸ்தவனுக்கு) கட்டளையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

      ஆகவே நாம் மாம்சத்திற்குரிய காரியமாகிய வீண் பெருமையை வெறுத்து, தாழ்மையான சிந்தையை தரித்துக் கொள்ளுவோம். அப்பொழுது நம்மில் மெய்யான சந்தோஷமும், சமாதானமும் காணப்படும். “இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்” (கொலோ 3:8) என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இவைகள் ஒருபோதும் பிரயோஜனமாக இருக்காது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இவ்வித குணங்கள் நம்மில் காணப்படுமானால் நாம் மறுபடியும் பிறக்கவில்லை என்று அர்த்தம். “பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?” (1 கொரி 3:3). நம் வாழ்க்கையில் மனத்தாழ்மை இருக்கும்பொழுது மாத்திரமே ஆவிக்குரிய சிந்தைக் காணப்படும். ஆகவே மனத்தாழ்மையை தரித்துக் கொள்வோமாக.