ஜனவரி  30

 “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?” (ரோமர் 8:36).

கிறிஸ்தவ வாழ்க்கை அன்பினால் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட வாழ்க்கை. இந்த அன்பு தற்காலிகமானது அல்ல. இது நித்தியமான அன்பு. உலகம் உண்டாகுகிறதற்கு முன்பாகவே தேவன் தம்முடைய மக்களைப் பிரித்தெடுத்தார். நாம் ஆண்டவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் இந்த அன்பை நம்முடைய வாழ்க்கையில் ருசிக்கிறோம். அந்த அன்பில் நாம் தொடர்ந்து வளருகிறவர்களாய் காணப்படுவோம். மெய்தான் வாழ்க்கையில் பல போராட்டங்கள் இருக்கலாம். வேதம் சொல்லுகிறபடி பல போராட்டங்களை நம்முடைய வாழ்க்கையில் கடந்து போகிற பாதையாக நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. 1கொரிந்தியர் 15:30 “நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்” ஆனால் இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும் தேவனுடைய அன்பினால் இணைக்கப்பட்டிருந்தால் மாத்திரமே ஜெயமுள்ளவர்களாய் வாழ முடியும். 2கொரிந்தியர் 4:11 “எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.” எந்தளவுக்கு வாழ்க்கையின் இக்கட்டுகளும் நெருக்கங்களும் காணப்படுகிறதாய் இருந்தாலும், தேவனுடைய அன்பினால் இணைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒன்று சொல்லக்கூடிய காரியம், “கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?”. பவுல் ஒரு பெரிய பட்டியலிட்டு சொல்லுகிறார் “உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.” தேவனுடைய அன்பின் மூலமாக மாத்திரமே அவருடைய அன்பை அறிந்து வாழுவதின் மூலமாக மாத்திரமே நாம் இந்த உலகத்தில் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் வாழ முடியும். பல போராட்டங்கள் சோர்வுகள் தளர்வுகள் மத்தியிலும் நாம் வெற்றியோடு வாழ முடியுமா? தேவனுடைய அன்பை அறிந்து அதில் நிலைதிருக்கிற வாழ்க்கையின் மூலமாக நாம் நிச்சயமாக வெற்றியோடு வாழ முடியும். மேலும் அவருக்கு பிரியமானவர்களாயும் காணப்படுவோம்.