நவம்பர் 27
“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல” (மத் 6:12)
மன்னிக்கும் சுபாவம் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அவசியம். மன்னிக்கும் குணம் இல்லாமல் நாம் மெய்யான சாட்சிகளாய் இருப்பதில்லை. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்களையும் மறக்க முடியாதவர்களாயும், அதற்கு காரணமானவர்களை மன்னிக்கமுடியாதவர்களாயும் இருக்கிறீர்களா? இதை வாசிக்கும் அருமையானவர்களே! உங்களையே நீங்கள் தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் ஆராய்ந்துப்பாருங்கள்.
நீங்கள் உங்கள் தப்பிதங்களை தேவன் மன்னிக்கவேண்டுமென்று ஜெபிக்கிறீர்கள், அவ்விதம் எதிர்ப்பார்க்கிறீர்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. அது நல்லது. ஆனால் தேவன் நம்முடைய பாவங்களை மன்னிப்பது குறித்து என்ன சொல்லுகிறார்? “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்” (மத் 6:15). ஜெபத்திற்கும் மன்னிக்கும் தன்மைக்கும் உள்ள உறவைப் பாருங்கள். கர்த்தருடைய ஜெபத்தில் ‘எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிகிறது போல’ என்று ஜெபிக்கக்கூடிய விதத்தில் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை இருக்கிறதா? நீங்கள் முழுமனதோடே இவ்விதமாய் ஜெபிக்கமுடியுமா? இல்லையென்றால் நீங்கள் இவ்விதமாக ஜெபிப்பதில் பிரயோஜனம் இல்லை. நீங்கள் மன்னிக்கமுடியாத காரியங்களை இருதயத்தில் வைத்திருந்தால் அது கசப்பான உணர்வுகளை உங்களில் கொண்டிருக்கச் செய்யும். அந்த கசப்பான உணர்வுகள் வெறுப்பான தன்மைகளை வெளிப்படுத்தும்.
இவ்விதம் வாழுபவர்கள் தேவனுடைய அன்பின் தத்துவத்திற்கு முற்றிலும் முரண்பட்டு வாழ்கிறார்கள். ஆண்டவருடைய அன்பு, பாவிகளையும் மன்னிக்கும் அன்பு. சிலுவையில் தன்னைக் கொடூரமாய் அறைந்தவர்களைப் பார்த்து ‘இயேசு, பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.’ (லூக் 23:34). மன்னிக்கிற குணத்தை கர்த்தர் நமக்குக் கொடுக்கும்படி ஜெபிப்போம். அது கிறிஸ்துவை நம்மில் வெளிப்படுத்தும்.