கிருபை சத்திய தின தியானம்
நவம்பர் 2 நாத்திகன் சங்கீதம் 14 : 1 – 7
“தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்,
அவர்கள் தங்களைக் கெடுத்து அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்” (சங் 14 : 1)
தேவன் இல்லை என்பது, மதிகெட்டவனின் தத்துவம். அநேக பாவங்களில் அவன் துணிந்து செல்லுகிறான். இன்றைக்கும் அநேக கிறிஸ்தவ நாத்திகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் யார்? ஆம்! இவர்கள் ஆலயங்களுக்கு செல்லுவார்கள் மற்றும் பல கிறிஸ்தவ பழக்கவழக்கங்களையும் கொண்டிருப்பார்கள். சொல்லப்போனால் ஆலயத்தில் போதிக்கிற போதகர்களாகவும் கூட இருப்பார்கள். ஆனால் இருதயத்தில் மெய்யாலும் இவர்கள் தேவன் உண்டென்று விசுவாசிப்பதில்லை. தேவ பயம் என்பது இவர்களுக்கு கிடையாது. என்ன பரிதாபம்! அருமையான சகோதரனே! சகோதரியே! நீ உன் உள்ளத்தில் எப்படி இருக்கிறாய்? வெளியே கிறிஸ்தவ பெயர், கிறிஸ்தவ பாரம்பரியம், ஆனால் உள்ளத்திலோ நாத்திகம். உன்னுடைய நிலை மிகவும் பயங்கரமானது. ஆகவே நீ உன்னைத்தானே கெடுத்துக்கொள்ளுகிறாய். உன் ஆத்துமாவை நீ அழித்துக் கொள்ளுகிறாய். உன்னுடைய பக்தி என்ற போர்வை ஒரு போதும் உனக்கு உதவி செய்யாது.
தேவனை அறியாத ஒரு இருதயம் கடினப்பட்டதாய் இருக்கும். தொடர்ந்து கடினப்பட்டுக் கொண்டே இருக்கும். பார்வோன் ‘நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்.’ என்றான். மெய்தேவனை அறியாத ஒவ்வொரு மனிதனும் ஒரு நாத்திகனே..
அருமையானவர்களே, வேதம் மெய் தேவனை விசுவாசிக்காமல் வெறும் போலி பக்தி வேஷம் போடுகிறவர்களைக் குறித்துக் கடுமையாகச் சொல்லுகிறது. ‘அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோம் என்று அறிக்கை பண்ணுகிறார்கள். கிரியைகளிலோ அவரை மறுதலிக்கிறார்கள்.’ (தீத்து 1 : 16) உன்னைக் குறித்து இவ்விதம் சொல்லப்படுமானால் உன் போலி பக்தியைத் தள்ளிவிட்டு இயேசுவை நோக்கி ஆண்டவரே, என்னை மன்னித்து மெய்கிறிஸ்தவனாக மாற்றும். போலி கிறிஸ்தவனாய் இனிமேலும் நான் வாழ விரும்பவில்லை என்று ஜெபி. தேவன் அவ்விதமாகவே உன்னை மாற்றுவார்.