“மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.” (கலாத்தியர் 3:13).
தேவனுடைய அன்பை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால், தேவனுடைய கோபாக்கினையைக் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய கோபம் என்பது மனிதனுடைய கோபத்தைப் போல அல்ல. தேவன் அன்புள்ளவர். ஆனால் அதேசமயத்தில் தேவன் நீதியுள்ளவர். தேவனுடைய நீதியான தன்மையை அவருடைய அன்பிலிருந்து நாம் பிரிக்க முடியாது. அன்பு அநியாயத்தில் சந்தோஷப்படாது என்று வேதம் சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். தேவன் ஆதாமிடத்தில் அந்தக் கனியை குறித்து எச்சரித்து அதை நீ புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று எச்சரித்தார். ஆதாம் ஏவாள் கீழ்ப்படியாமல் போனபொழுது அவர்கள் மேல் கோபாக்கினையாகிய மரணம் வந்தது. அவர்கள் பேரில் மட்டுமல்ல, அவர்களுடைய சந்ததியான நம்மெல்லாரும் மீதும் அந்த கோபாக்கினை இருக்கிறது. தேவனுடைய திட்டத்தின்படி ஒரு மனிதனின் மேல் எந்த நேரத்திலாகிலும் அவருடைய கோபாக்கினை வரலாம். தேவன் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் செய்த மகத்துவமான அன்பின் காரியம், அவர்கள் வாழ்க்கையிலிருந்து இந்தக் கோபாக்கினையை நீக்கிப்போட்டது தான். ஏனென்றால் இயேசு கிறிஸ்து தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவரின் ஆக்கினையையும் அவர் சிலுவையில் சுமந்தார். “என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு” (எபிரெயர் 2:9). இயேசு கிறிஸ்து தம்முடைய பிள்ளைகளின் கோபாக்கினையை அவர் ஏற்றுக்கொண்டார். கிறிஸ்தவ வாழ்க்கையில் என் தேவன் என்னை எவ்வளவாய் அன்புகூர்ந்திருக்கிறார் என்பதை எண்ணிப்பார்க்கும்பொழுது, எவ்வளவு பயங்கரமான கோபாக்கினையிலிருந்து என்னை மீட்டுக்கொண்டிருக்கிறார்! நரகம் என்பது தேவனுடைய கோபாக்கினை ஊற்றப்பட்ட ஒரு இடமாகவே இருக்கிறது. இந்த உலகத்தில் காட்டிலும் நரகத்தில் ஒரு மனிதன் தேவனுடைய கோபாக்கினையை நித்திய நித்தியமாய் சுமக்க வேண்டியதாயிருக்கும். அது எவ்வளவு பயங்கரமான ஒரு நிலை! நாம் நம்முடைய வாழ்க்கையில் தேவ கோபாக்கினையிலிருந்து மெய்யாலுமே மீட்கப்பட்டிருக்கின்றோமா? இதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்பது மிக முக்கியமானது.