“ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி” (2 தீமோத்தேயு 2:10).

   நாம் தெரிந்துகொள்ளப்பட்ட விசேஷித்த பரிசுத்த ஜனங்கள். நாம் தேவனைத் தெரிந்துகொள்ளவில்லை, ஆனால் தேவன் நம்மைத் தெரிந்துகொண்டிருக்கிறார். தெரிந்துகொண்டது மாத்திரமல்ல, அவர் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார். அவர் நம்முடைய வாழ்க்கையில் எதற்காக இவ்விதம் செய்கிறார்? நம்மைப் பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து இரட்சிக்கும்படியாகவே. மெய்யாலுமே இந்த உலகத்தில் எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ அவன் பாக்கியவான். ஒரு மன்னிக்கப்படாத மனிதனுடைய நிலை, எப்பொழுதும் குற்றமுள்ள மனசாட்சியோடு வாழுகிற ஒரு நிலையாக இருக்கிறது. ஆனால் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் அந்தக் குற்றமுள்ள மனசாட்சியும், தேவனுக்கு முன்பாகக் குற்றமுள்ளவன் என்பதான காரியம் நீங்கி, நீதிமான் என்று அழைக்கப்படதக்கதாக அவனுடைய நிலை மாற்றப்படுகிறது. இரட்சிக்கப்படும்பொழுது பாவத்திலும் அதின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவது மாத்திரமல்ல, அதை நாம் நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்கிறோம். இன்னுமாக நாம் இந்த உலகத்திற்கு உரியவர்களாக வாழும்படியான வாழ்க்கைக்கு அல்ல, நித்தியமான ஒரு மகிமைக்கு  அழைக்கப்பட்டவர்கள். ஆகவே நாம் நம்முடைய இந்த தற்காலத்துப் பாடுகளினால் நசுக்கப்படுவதும் சோர்ந்துபோவதும் தேவனுக்கு மகிமையாய் இருக்காது. இந்த உலகத்தில் நாம் தேவனுக்காக சாட்சியுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்றால், பாடுகளின் மத்தியில் எழும்பிப் பிரகாசிக்கிற வாழ்க்கையை வெளிப்படுத்துவோம். தேவன் அப்படிபட்ட கிருபையை நமக்குத் தருவாராக.