மார்ச் 5     

 “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1யோவான் 3:1).

  கிறிஸ்தவ வாழ்க்கையில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற முதலாவது கட்டளை, தேவனை முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும், முழு மனதோடும் நேசிக்க வேண்டும் என்பதே. ஆனால் நம்முடைய வாழ்க்கையில் தேவனை எவ்விதமாய் நேசிப்பது? கிறிஸ்தவ வாழ்க்கையில் தேவனுக்கும் நமக்கும் இடையேயான உறவு என்பது மிக முக்கியமானது. இந்த உறவு இல்லாமல் நாம் தேவனை நேசிக்க முடியாது. அநேக வேளைகளில் நம்முடைய வாழ்க்கையில் சத்தியத்தை அறிந்திருக்கலாம். ஆனாலும் தேவனை நாம் முழு இருதயத்தோடு நேசிக்கக்கூடிய ஒரு உள்ளான உணர்வோடுகூடிய நேசம் நம்மில் காணப்படுவதில்லை. நம்முடைய வாழ்க்கையில் தேவனின் அன்பைக் குறித்து யோசிக்கும்போது, எத்தனையோ மக்கள் மத்தியில் தேவன் நம்மைத் தெரிந்துகொண்டிருக்கிறார். நாம் இதற்குப் பாத்திரவான்கள் அல்ல. தேவனுடைய தெரிந்துகொள்ளுதலைக் குறித்துச் சிந்திப்பது அவசியம். தேவனை நாம் நேசிப்பதற்கு அது உதவியாக இருக்கும். நாம் தேவனோடு கொண்டிருக்கிற உறவு ஆழமானதாக இருப்பது அதிமுக்கியம். அநேகருடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய வறட்சி இருப்பதற்கு காரணம் என்னவென்றால், அவர்கள் ஆண்டவருடைய மகத்துவமான கிருபையைச் சிந்தித்து அந்த அன்பைப் பற்றிக்கொண்டு வாழுவதில்லை. இது நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய அன்பில் இணைந்திருக்கின்ற வாழ்க்கையினால் மாத்திரமே தேவனை நாம் அனுபவிக்கிறவர்களாய் வாழ முடியும். நம்முடைய வாழ்க்கையில் நாம் தேவனை நேசிப்பதின் மூலமாகவும், இந்த அன்பைப் பிரதிபலிப்பதின் மூலமாகவும் ஆண்டவருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறவர்களாகக் காணப்படுவோம். ஆகவே இவ்வளவு பெரிதான அன்பிற்காக நாம் தேவனை நன்றியுள்ள உணர்வோடு நோக்கிப் பார்த்து அவரை நேசிப்போமாக.