“என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்” (சங்கீதம் 30:11).
புலம்பல் என்பது நம்முடைய வாழ்க்கையில் வேதனை அளிக்கக் கூடிய காரியம். இதை ஆண்டவர் ஆனந்தக் களிப்பாக மாற்றினார் என்று சங்கீதக்காரன் சாட்சியாக அறிவிக்கிறான். கர்த்தர் எந்த ஒரு சூழ்நிலையையும் அழகாக மாற்றி அமைக்கிறவர் என்பதை நிரூபிக்கிறதாக இந்த வசனம் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் தேவன் மாத்திரமே நம்மை ஆனந்தக் களிப்பாக மாற்ற முடியும் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். அது மட்டுமல்ல “சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்” (ஏசாயா 61:3). துயரப்பட்டவர்களைச் சீர்படுத்துவது என்று சொல்லுவது மிகுந்த உன்னதமான காரியம். தேவன் மட்டுமே சாம்பலைப் போன்ற வீணான காரியங்களில் நம்முடைய காலங்களையும் பிரயோஜனத் தன்மையையும் செலவிடாமல் சிங்காரத்தைக் கொடுப்பவராக இருக்கிறார். மேலும் துயரத்திற்கு பதிலாக ஆனந்தத்தை கொடுக்கிறார். ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையைக் கொடுக்கிறார். இவ்வளவு அருமையான காரியங்களை இந்த உலகத்தில் யார் நமக்கு கொடுக்க முடியும்? அதுவும் இலவசமாக யார் நமக்கு கொடுக்க முடியும். மேலும் அவர்கள் கர்த்தருடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்கள் எனப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு அருமையான காரியத்தைக் கர்த்தர் நம் வாழ்க்கையில் செய்பவராக இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையிலும் நிச்சயமாக அதை நிறைவேற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்து துதிப்போமாக. தேவனால் மாற்றப்பட முடியாத எந்த சூழ்நிலையும் இல்லை என்பதை நாம் விசுவாசிக்கும் பொழுது எந்த சூழ்நிலையிலும் நாம் தேவனை சார்ந்து அவர் செய்கிற மகத்துவமான சூழ்நிலைகளை மற்றும் வல்லமையை கண்டு உணர்ந்து வாழ முடியும்.