ஆகஸ்ட் 14          

“அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்ரிதியாமலுமிருந்து தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள். உணர்வில்லாத                              அவர்களுடைய இருதயம் இருளடைந்தது”. (ரோமர் 1:21)

      ஒரு மனிதனின் சிந்தனை, அவனுடைய வாழ்க்கையை நடத்தும் திசைக்கருவியாய் இருக்கிறது. உன் சிந்தனையைக் குறித்து விழிப்பாக இருக்கவேண்டும். நீ எவ்விதமான சிந்தனைகளால் ஆட்கொள்ளப்படுகிறாய் என்பதைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.

      தாவீது, தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துக கொள்ளும்; என்னைச் சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும்.” (சங் 139:23) என்று ஜெபிக்கிறார். உன் மாம்ச பிரகாரமான சிந்தனைகள் உன் வாழ்க்கையைத் தவறாய் நடத்திவிடும். ஆகவே நீ உன்னை புத்திமானென்று எண்ணாமல் தாவீதைப் போல் ஜெபி. ஆவிக்குரிய மனிதன் எல்லாவற்றிலும் தன்னை, தன் காரியங்களை ஆராய்ந்து நிதானிக்கிறவனாய்க் காணப்படவேண்டும்.

      மேலே சொல்லப்பட்ட வசனங்களில் எவ்விதம் அவர்கள் சிந்தனை அவர்களை வழிநடத்திற்று? அவர்கள் வீணரானார்கள். பிரயோஜனமற்றவர்களானார்கள். ஏன் அவர்கள் வீணரானார்கள்? தேவனை அறிந்தும் தேவனை குறித்தும், அவருடைய சத்தியத்தையும், அதின் விடுதலையையும் அறிந்தும் அவர்கள் அதை புறக்கணித்தார்கள். தேவன் சர்வ ஏகாதிபத்தியத்தின் தேவன். அவருக்குத் தங்களை, தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, அவருடைய சித்தத்தை நாடி வாழவேண்டும் என்று அவர்கள் எண்ணாமல் அதை அலட்சியப்படுத்தினார்கள். தேவனை மேன்மையாய் எண்ணி அவரை ஸ்தோத்திரிக்கவில்லை அதாவது அவருடைய வழிக்குத் தங்களை முழுமையாய் ஒப்புக்கொடுக்க மனதில்லை. அருமையான சகோதரனே! சகோதரியே! தேவன் உனக்கு கொடுத்திருக்கிற வெளிச்சத்தில் நடக்க உன் சிந்தனைகள் உன்னை வழிநடத்தட்டும். நீ தொடர்ந்து உணர்வில்லாத நிலையில் ஜீவிப்பாயானால் உன் இருதயம் இருளடைந்துவிடும் என்று தேவனுடைய வார்த்தை எச்சரிக்கிறது. கிருபையின் காலத்தைப் புறக்கணிக்காதே. ஏசா பிற்காலத்தில் மனந்திரும்ப விரும்பியும், மனந்திரும்பமுடியாமல் போயிற்று என்பதை மறவாதே.