ஏப்ரல் 4               

“உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்” (1 தெசலோ 5:24).

மனிதர்களாகிய நாம் முற்றிலும் மாறுகிறவர்கள் நம்முடைய பேச்சில், நடத்தையில், தீர்மானத்தில், செயலில் மாறுகிற தன்மை உள்ளவர்கள். அநேக சமயங்களில் ஆண்டவரைக் குறித்தும் அவ்விதமாக எண்ணிவிடுகிறோம். அது தவறு. வேதம் தெளிவாக சொல்லுகிற ஒரு சத்தியம் அவர் உண்மையுள்ளவர். உங்களை அவர் அழைத்திருக்கிறார். அவர் உங்களுடைய அனைத்துக் காரியங்களையும் அறிந்திருக்கிறார். உங்களை வழிநடத்த வேண்டிய பாதையை அறிந்திருக்கிறார். உங்களுடைய உணர்வுகள், சிந்தனைகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், சோதனைகள், நெருக்கங்கள், போராட்டங்கள், வியாதிகள், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார். இந்த தேவன் இவைகள் எல்லாவற்றிலும் உங்களுக்கு உதவி செய்பவராகவும் இருக்கிறார். உங்களை தேவன் அழைத்திருப்பாரானால், உங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும், பலப்படுத்தவும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். நீங்கள் ஒருக்காலும் உங்களுடைய வாழ்க்கையில் உங்களை அழைத்தவரை சந்தேகப்படாதேயுங்கள். அவருடைய கிருபை மாறாதது. அவருடைய உண்மைத்தன்மை மாறாதது.

“ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்” (சங்கீதம் 86:15). அதாவது தேவன் உண்மையுள்ளவர் என்று சொல்லப்படுகிறது. இந்த உண்மையுள்ள தேவனை நாம் எப்பொழுதும் சார்ந்து  வாழுவதில் உறுதியாக இருப்பது அவசியம். அப்போது நம்முடைய வாழ்க்கையானது எப்பொழுதும் சிறப்பானதாக இருக்கும். “தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்” (1 கொரிந்தியர் 1:9) அவரோடு நீங்கள் அன்பு கொண்டிருக்கவும், அவரின் இரக்கத்தைச் சார்ந்து நீங்கள் வாழும்படியாகவும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒருகாலும் மனிதனைப்போல தேவனை எண்ணாதே. ஏனென்று கேட்டால் அவர் மாறாதவர், கிருபை பொருந்திய உண்மையுள்ள தேவன்.