கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 10                           முதற்சாமத்தில் கூப்பிடு                                    புல 2 ; 10 – 20

‘எழுந்திரு முதற்ஜாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமூகத்தில் உன் இருதயத்தை தண்ணீரைப்போல ஊற்றிவிடு’ (புலம்பல் 2 : 19 )

            இஸ்ரவேல் தேசத்தில் நெபுகாத்நேசர் விட்டுபோன மீதியான ஜனங்களும், இடிக்கப்பட்ட ஆலயமும், அலங்கமும் மட்டுமே மிஞ்சியிருந்த காலத்தில்  எரேமியா தீர்க்கதரிசி அந்தமக்களோடு ஒருவராய் புலம்பலை வெளிப்படுத்துகின்றார். ஒருவேளை இந்தமக்களைப்போல நீங்களும் இவ்விதமான கைவிடபட்ட நிலையில் கடந்துபோகலாம். மற்றவர்களின் பாரங்களை நினைக்கும்போது நம்முடைய இருதயம் கிறிஸ்துவின் அன்பினால் ஏவப்பட்டு, அதிகமாய் நாம் அசைக்கப்படலாம். சூழ்நிலையானது எவ்வளவு கொடியதாயிருந்தாலும், தேவன் அவைகளின் மத்தியில் செயல்பட வல்லவராயிருக்கிறார் என்பதை மறவாதே. கடுமையான இருளாயிருந்தாலும் அதில் தேவன் தம்முடைய வெளிச்சத்தை பிரகாசிக்கமுடியும்.

            ஆகவே நீ என்ன செய்யவேண்டும்? நீ எழுந்திரு இன்னுமாக சோர்ந்துபோன நிலையில் தொடர்ந்திராதே. கர்த்தர் ‘ எழும்பி பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது’ (ஏசாயா 60 : 1). என்று சொல்லுகிறார். நீ எழும்பும் போது கர்த்தர் உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார். ஏனென்றால் கர்த்தருடைய ஒளி, இந்த உலகத்தில் எவ்வளவு இருளாக இருந்தாலும் அதைப் பிரகாசிப்பிக்கும். இருளின் கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவகுமாரன் வெளிப்பட்டார்  என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தருடைய ஒளி உன்மேல் வருகிறது, மாத்திரமல்ல அவருடைய மகிமை உன்மேல் உதிக்கும்.

            தேவனை நோக்கி ஜெபத்தில் கூப்பிடு. ‘என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களைஉனக்கு அறிவிப்பேன்’ (எரேமியா 33 : 3 ).தேவனிடத்தில் ஜெபி. உன் இருதயத்தை தண்ணீர்போல அவருடைய சமூகத்திலூற்றிவிடு. பாரம், இருதயத்தில் இருக்குமட்டாக அது உன்னை அழுத்தும். இந்த கைவிடபட்ட எருசலேமையும், அந்த மக்களையும் நினைவுகூர்ந்து திரும்பவும் கட்டின அதே தேவன் உன்னையும் அவ்விதம் கட்டுவார்.