கிருபை சத்திய தின தியானம்
ஆகஸ்ட் 1 என்னை நோக்கிக் கூப்பிடு சங் 50 : 1 – 15
‘ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு;
நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்’(சங் 50 : 15)
ஒரு மனிதனில் ஆபத்துக்காலம் என்பது ஒரு இருண்டகாலம். அவன் என்ன செய்வது என்பதைக் குறித்து அஞ்சி நிற்கும் வேளை. அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கும் வேளை. அன்பானவர்களே! நம்முடைய வாழ்க்கையிலும் இவ்விதமான காலங்களைக் கடந்து செல்லத்தான் வேண்டியிருக்கிறது.! இந்த உலக மனிதன் இவ்விதமான வேளைகளில் முற்றிலும் நசிந்துவிடுகிறான். அவனுக்கு மெய்யான உதவிக்கரம் நீட்டுவார் ஒருவருமில்லை. மனிதனின் உதவி விருதா.
ஆனால் தேவன் இவ்விதமான வேளைகளில் ‘என்னை நோக்கிக் கூப்பிடு என்கிறார்‘ ஒருவேளை நாம் கொஞ்சகாலமாக தேவனை நோக்கிக் கூப்பிடாமல் இருந்திருக்கலாம். ஆகவே இந்த ஆபத்து அவரை நோக்கிப் பார்க்கும்படியாக நமக்கு அனுப்பப்பட்டிருக்கலாம். தொடர்ந்து தேவனை அண்டிக்கொள்ளாத வாழ்க்கை மிகவும் ஆபத்தானது. ஆகவே இவ்விதமான வேளைகளை தேவன் தம்முடைய சர்வ ஞானத்தைக்கொண்டு நமக்கு அனுமதித்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்வோம்.
நீ தேவனை நோக்கிக் கூப்பிடும்போது அவர் வாக்கு உன்னை தைரியப்படுத்தட்டும் ‘நான் உன்னை விடுவிப்பேன்‘ அது எவ்விதமான ஆபத்தாக இருந்தாலும் சரி, நான் உன்னை விடுவிப்பேன் என்று சொல்லியிருக்கிறாரே. ஒருவேளை வியாதியாக இருக்கலாம் அல்லது எதுவாக இருந்தாலும் தேவனுக்கு அது ஒரு பொருட்டல்ல. அவர் உன்னை விடுவிப்பது மாத்திரமல்ல. உன்னை சரியான ஆவியின் நிலைக்குள்ளாகவும் கொண்டுவருவார்.
‘அவரை மகிமைப்படுத்துவாய்‘ என்று சொல்லப்பட்டிருப்பது, தேவன் பாதகமான சூழ்நிலையையும் சாதகமான சூழ்நிலையாக மாற்ற வல்லவர் என்பதை வெளிப்படுத்துகிறது. உன் ஆபத்து வேளையில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடு. ஆனால் அதோடு நின்று விடாதே, விசுவாசத்தோடு அவர் கொடுத்த விடுதலைக்காகத் தேவனைத் துதி. தேவன் ஆச்சரியமான விதத்தில் உன்னை விடுவிப்பார்.