“கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்” (சங்கீதம் 5:12).     

கர்த்தர் தம்முடைய பிள்ளையை எவ்விதமாக ஆசீர்வதிக்கிறார்? நீதிமான் என்பது கர்த்தருடைய பிள்ளைகளைக் குறிக்கிறதாய் இருக்கிறது. காருண்யம் என்பது அவருடைய தயவு, கிருபை மற்றும் அவருடைய மெய்யான ஆசீர்வாதம். தேவன் காருண்யம் என்னும் கேடகத்தினால் தம்முடைய பிள்ளைகளைப் பாதுகாக்கிறார், வழிநடத்துகிறார். ஒரு தேவனுடைய பிள்ளைக்கு அவர் கொடுக்கும்படியான பாதுகாப்பு என்பது, இந்த உலகத்தில் மனிதன் கொடுக்கும்படியான அளவின்படி அல்ல. அது மிகவும் மேன்மையானது. அவருடைய பாதுகாப்பு ஒப்பிடப்பட முடியாதது. தேவன் இவ்விதமாக தம்முடைய பிள்ளைகளைப் பாதுகாக்கிறார். தீமை ஒன்றும் அவர்களை அணுகாது. ஏனென்றால் அவருடைய சித்தம் இல்லாமல் எந்தவொரு காரியமும் நேரிடுவதும் இல்லை. தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது என்று வேதம் தெளிவாய்ச் சொல்லுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இந்த உலகத்தில் இருக்கிற பாதுகாப்பைப் போல அதற்கு ஒப்பான பாதுகாப்பு என்பது எதுவுமில்லை. இந்தப் பாதுகாப்பு அவருடைய தயவினாலும் அவரின் கிருபையின் பாராமரிப்பினாலும் நிறைந்த ஒன்று. இவ்விதமான சிலாக்கியங்களுக்காக கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறோமா? இந்த மேலான சிலாக்கியங்களை நாம் விலைமதிக்கின்றோமா? அநேக வேளைகளில் நாம் விலைமதிக்கத் தவறிவிடுகிறோம். அதுவே நம்முடைய ஆசீர்வாதத்திற்கு தடையாய்ப் போய்விடுகிறது. அருமையானவர்களே, உங்களுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய பாதுகாப்பை உணர்ந்து நீங்கள் வாழ்கின்றீர்களா என்பதை எண்ணிப் பாருங்கள்.