“பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது” (1பேதுரு 1:2).

பரிசுத்த ஆவியானவர், ஒரு மனிதனில் அவனுடைய பாவத்தைக் குறித்து உணர்த்தி, பாவத்தின் பரிகாரியாகிய இயேசு கிறிஸ்துவையும் அவர் நிறைவேற்றின பணியையும் அவர்மூலமாக ஏற்பட்ட இரட்சிப்புக்குள்ளும் அவர் நம்மை வழிநடத்துகிறார். மேலும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் பண்ணுகிறவராய் நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்குள்ளாக வழிநடத்துகிறார் என்பது ஒரு உன்னதமான சத்தியம். ஒவ்வொரு வேளையும் அவர் நம்மை பரிசுத்தப் பாதையில் வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பிரித்தெடுத்து, பரிசுத்தப்படுத்தி அவரால் பிரயோஜனப்படுத்தக்கூடிய பரிசுத்த பாத்திரமாக நம்மை உருவாக்குகிறார். நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பரிசுத்ததில் முன்னேறிச் செல்வதே நம்மில் பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுவதின் அடையாளமாக இருக்கிறது. பரிசுத்தம் என்பது நம்முடைய வாழ்க்கையில் மிகமிக முக்கியம். பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிப்பதில்லை. நாம் இந்த உலகத்தில் பரிபூரணம் அடைவதில்லை ஆனால் அந்தப் பரிபூரணத்தை நோக்கி ஓடுகிற ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை இருந்தால் மாத்திரமே பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் பண்ணுகிறார் என்பதற்கு அர்த்தமாக இருக்கிறது. ஆவிக்குரிய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் என்னைப் பெலப்படுத்துகிறார். ஒரு இரட்சிக்கப்பட்டவனின் வாழ்க்கையில் பரிசுத்தமாகுதல் என்பது தொடர்ச்சியாக நடைபெறுகின்ற காரியமாகவே இருக்கிறது.  “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” (1கொரிந்தியர் 6:11). பரிசுத்த ஆவியானவர் ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனில் செயல்பட்டு, கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றுகிறார். இது அவர் செய்கிற மகத்துவமான காரியமாக இருக்கிறது. நாம் இரட்சிக்கப்பட்டிருக்கின்றோமா தேவனால் அழைக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோமா என்பதைக் குறித்து நாம் ஜாக்கிரதையாய் உறுதியாக்கிக்கொள்வது அவசியம்.  அப்படி செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை என்று வேதம் தெளிவாய்ச் சொல்லுகிறது.