பிப்ரவரி 14        விசுவாசத்தினாலே பாவி நீதிமானாக்கப்படுதல்        ரோமர் 5:1-11

“நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1).

      தன்னால் முடியாது என்று எண்ணுகிற ஒரு மனுஷனுக்கு இந்த வசனம் மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. அநேக சமயங்களில் நம்முடைய சுய நம்பிக்கையின் மூலமாக நாம் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளவும், நம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ முடியும் என்பதான ஒரு தவறான எண்ணம் நமக்குள் நம்மை அறியாமலே ஆட்கொள்ளுகிறது. ஆனால் ஆவிக்குரிய காரியங்கள் அனைத்துமே விசுவாசத்தினால் மட்டுமே கூடும். விசுவாசமே ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அடிப்படையான அந்த விசுவாசத்தை கூட தேவன் நமக்கு கொடுக்கிற ஈவு என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். ஆனால் அந்த ஈவுக்காக நாம் பெரும்படியான கிருபையை அதிகமாய்ச் சார்ந்த கொள்ளவும், நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய கிருபையினால் மாத்திரமே நாம் நீதிமானாக்கபடுகிறோம் என்பதையும் உணர்ந்து வாழ்வதில்லை. அநேக வேளைகளில் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எதிரான எண்ணங்களும் சிந்தனைகளும் நம்மை ஆட்கொள்கிறது. அது தேவனுக்கு விருப்பமில்லாத ஒன்று. அது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு  ஏற்றதுமல்ல.

      “நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே” (கலாத்தியர் 2:16) என்று பவுல் எழுதுகிறார். ஆகவே விசுவாசத்தினால் மட்டுமே நாம் இந்த சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். “அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்” (ரோமர் 5:2). ஆகவே நம்முடைய மேன்மை பாராட்டுதல் நம்மைக் குறித்து அல்ல. நாம் மேன்மை பாராட்ட வேண்டுமானால் கிருபையையும், கிருபையின் ஈவான சிலுவையைக் குறித்து மட்டுமே  மேன்மை பாராட்ட முடியும். இந்த மிகப்பெரிய ஒரு சிலாக்கியத்தை தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுப்பதினால், அவருடைய அன்பின் ஆழத்தை நம்மால் விளங்கிக் கொள்ளுகிறோம். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிருபையை சார்ந்த விசுவாசம். அந்த விசுவாசமும் தேவன் நமக்கு கிருபையாய் கொடுக்கிற ஈவு. அனைத்துமே கிருபை வேறொன்றுமில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளும்பொழுது அது நமக்கு ஆசீர்வாதமானதாக இருக்கும்.