“இஸ்ரவேலோ, கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்” (ஏசாயா 45:17).

இரட்சிப்பு என்பது நித்தியமானது. தேவன் யாரை இரட்சிக்கின்றாரோ அவர்களை நித்தியத்திற்கென்று இரட்சிக்கிறார். இந்த உலகத்தின் காரியத்தைப் போல இரட்சிப்பு நடுவில் முடிந்துவிடுகிறதல்ல. அது நித்திய நித்தியமாய் ஒரு மனிதன் தேவனோடு வாழக் கூடிய ஒரு வாழ்க்கைக்கென்று அவனை வழிநடத்துகிறது. ஆகவே இரட்சிப்பைப் பெற்ற ஒரு வாழ்க்கையைப் போல மகிமையான வாழ்க்கை வேறில்லை. நீங்கள் மெய்யாலுமே இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? இதைக் குறித்து நாம் உறுதிபடுத்திக் கொள்வது நல்லது. நம்முடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள் என்று வேதம் சொல்லுகிறது. மேலும்  ஒரு மனிதன் இரட்சிக்கப்படும்பொழுது அவன் தேவனுடைய பிள்ளையாக அவன் வாழுகிறான். தேவன் ஒரு நித்தியமான நோக்கத்திற்காக அவனை இரட்சித்திருக்கிறார். இந்த உலகத்தின் அடிமைத்தனத்திலிருந்து அவனை விடுதலையாக்கியிருக்கிறார். இவ்விதமான ஒரு வாழ்க்கையை தேவன் கிருபையாய் நமக்குக் கொடுக்கும்பொழுது நாம் எவ்விதம் வெட்கப்படுகிறவர்களாகக் காணப்பட முடியும்? இல்லை. தேவன் நம்மோடு கூட இருக்கிறார். நமக்குத் துணையாக நம்மைப் பாதுகாக்கிறார். நம்மைப் போஷித்து வழிநடத்துகிறார். இந்த உன்னதமான தேவன், இரட்சிப்பின் மூலமாக நம்முடைய தேவனாக இரட்சகராக தகப்பனாகக் காணப்படும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் எவ்விதமாக வெட்கப்படுதலும் கலக்கமும் இருக்க முடியும்? இல்லை. தேவன் போதுமானவர். அவருடைய கிருபை போதுமானது.